பெரம்பலூர் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் பீதியில் பொதுமக்கள் ஓட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பீதி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறை, லெப்பைக்குடிக்காடு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் திடீரென லேசான நில

Update: 2016-12-25 21:45 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பீதி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கம்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறை, லெப்பைக்குடிக்காடு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் அலமாரியில் இருந்த பொருட்கள் லேசாக குலுங்கின. மேலும் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் ஆடுவதுபோல் உணரப்பட்டது.

இதனையடுத்து வீட்டுக்குள் இருந்த பொதுமக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சில வினாடிகளே உணரப்பட்ட நிலநடுக்கத்தால் பெரியஅளவில் பாதிப்புகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிப்பு இல்லை

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக உணரப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

சில பகுதியில் மட்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அதனால் எந்த வித பாதிப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து திருமாந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் கூறும்போது, ‘சொம்பில் வைத்திருந்த தண்ணீர் அலம்பியது. இதனால் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெற போகிறது என நினைத்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன். அப்போது, என்னை போல் சிலரும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் இல்லை’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்