பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வீட்டுமனையை வரன்முறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க பொதுக்குழு கோரிக்கை
பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க பொதுக்குழு கூட்டம் கோவையில்
கோவை
பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுக்குழு கூட்டம்கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கினார். இதில், துணை தலைவர்கள் கே.கண்ணன், ஆர்.செல்வராஜ், சட்ட ஆலோசகர் கே.ஆர்.சிவராஜ், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழக அரசுஅங்கீகாரமற்ற மனை மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி மனைகளை வரன்முறைப்படுத்தி அங்கீகாரம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் பல மனைகள் விற்கப்பட்டு பல வீடுகள் கட்டப்பட்டு, பாதி மனைகள் விற்றும், பாதி மனைகள் விற்கப்படாமல் உள்ள லே–அவுட்களை வரன்முறைப்படுத்த வேண்டும்.
கடந்த 2009–ம் ஆண்டு சட்டமாக இயற்றப்பட்ட புதிய பிரிவு 22–ன்படி ஒரு நிலம், வீட்டுமனையாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதை மீண்டும் மனையாக பதிவு செய்ய தடையில்லை என்கிற பிரிவை அமல்படுத்த வேண்டும்.
குடும்பத்தினர் செய்யும் தானம், பாக சாசனம், விடுதலைப்பத்திரம் போன்ற ஆவணங்கள், அடமானம் மற்றும் குத்தகை போன்ற ஆவணப்பதிவை எல்லா காலத்திலும் தடையின்றி பத்திரப்பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசின் வரன்முறை திட்டத்தை எதிர்பார்த்து, பல லட்சக்கணக்கான குடும்பங்களும், அந்த தொழிலை நம்பி கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்த முதலீட்டாளர்களும், முகவர்களும், மனைகளை வாங்கிய லட்சக்கணக்கான நடுத்தர மக்களும் உள்ளனர். இவர்களை காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறோம்.
25 ஆயிரம் லே–அவுட்டுகளில் 50 லட்சம் மனைகள் ஐகோர்ட்டு தடை உத்தரவால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தடைபட்டுள்ளது. வருகிற 9–ந் தேதி ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணக்கு வர உள்ளது. அதற்கு முன்பு விற்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்தி தடையை நீக்க ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
எளிமைப்படுத்த வேண்டும்முழுமை திட்டத்தில் விவசாய பயன்பாடு, குடியிருப்பு பயன்பாடு, தொழிற்சாலை பயன்பாடு என 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதால் தான் விவசாய நிலங்களில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் உருவாவதற்கு காரணமாக அமைந்து விட்டது.
டி.டி.சி.பி. மனைப்பிரிவு அங்கீகாரம் பெறுவதற்கு நீண்ட காலதாமதம் ஆவதால் அங்கீகாரம் இல்லாமலே மனைப்பிரிவு அமைத்து விற்று விடுகிறார்கள். மேலும் அங்கீகாரமற்ற மனைகள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் நடுத்தர மக்கள், பாமர மக்கள் அதை வாங்கி வீட்டை கட்டி குடியேறுகிறார்கள். டி.டி.சி.பி. அங்கீகார முறையை எளிமைப்படுத்தி ஒற்றை சாளர முறையில் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
விவசாய நிலங்களையும், விவசாயத்திற்கு வாய்ப்பு இல்லாத நிலங்களையும் முறைப்படுத்தி விவசாய நில பட்டியலை தயாரித்து அவற்றை இனிமேல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். எனவே இந்த கோரிக்கைகளை பரிசீலித்து வருகிற 9–ந் தேதிக்குள் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுத்து அங்கீகாரமில்லா மனை மற்றும் மனைப்பிரிவுகள், விற்கப்படாத மனைகளுக்கு முழுமையான வரன்முறை திட்டத்தை தயாரித்து ஐகோர்ட்டில் சமர்ப்பித்து தடையை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.