வருசநாடு அருகே சாலை வசதி இல்லாததால் அவதிப்படும் கிராம மக்கள்

வருசநாடு அருகே சாலை வசதி இல்லாததால் மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தார்சாலை வசதி தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் அண்ணாநகர் என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்

Update: 2016-12-25 22:30 GMT

கடமலைக்குண்டு,

வருசநாடு அருகே சாலை வசதி இல்லாததால் மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தார்சாலை வசதி

தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் அண்ணாநகர் என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இந்த கிராம பகுதியில் இலவம், முந்திரி உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த கிராமத்திற்கு தார்சாலை வசதி இல்லை. தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து அண்ணாநகர் கிராமம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மண்சாலை மட்டுமே அமைந்துள்ளது. இது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்வதற்குகூட மிகுந்த சிரமமாக உள்ளது. பஸ் வசதி இதுவரை செய்து தரவில்லை.

மருத்துவ சிகிச்சை

தற்போது வரை இந்த கிராம மக்கள் மாட்டு வண்டிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் கடைகள் இல்லாததால் பொதுமக்கள் அன்றாட வீட்டு தேவைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு 10 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தார்சாலை வசதி இல்லாததால் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற டோலி கட்டியோ அல்லது மாட்டு வண்டியில் வைத்தோ தும்மக்குண்டு கிராமம் வரை எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதே போல இந்த கிராமத்திற்கான ரேஷன் கடை தும்மக்குண்டு கிராமத்தில் அமைந்துள்ளது. எனவே ரேஷன் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதனை தலைச்சுமையாக சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அண்ணாநகர் கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள்

ஆனால் தார்சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தார்சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்களை வெளியூர்களுக்கு அனுப்பி விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கின்றனர். வசதியில்லாதவர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க மழை காலங்களில் இந்த மண் சாலையில் நீர் தேங்கி காணப்படும். அதுபோன்ற நேரங்களில் இந்த பாதை வழியாக நடந்து செல்ல முடியாது. அப்போது வீடுகளில் இருந்து வெளியே செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அண்ணாநகர் கிராமத்தை போல அருகில் உள்ள கோடாலியூத்து கிராம மக்களும் தார்சாலை வசதி இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருசநாடு அருகே அமைந்துள்ள அண்ணாநகர் மற்றும் கோடாலியூத்து கிராமங்களுக்கு தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்