பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பின்னரும் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மதுரை சாலையில் ஸ்டேட் வங்கி காலனி அருகே திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.