நாமகிரிப்பேட்டை அருகே அடிக்கடி விபத்து: வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

நாமகிரிப்பேட்டை அருகே அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். லாரி மோதி பெண் காயம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் 250–க்கும் மேற்பட்ட

Update: 2016-12-25 23:00 GMT

ராசிபுரம்,

நாமகிரிப்பேட்டை அருகே அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

லாரி மோதி பெண் காயம்

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் 250–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்து சென்ற கூலித்தொழிலாளியான கந்தசாமி (வயது65) என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ராசிபுரத்தில் இருந்து ஆயில்பட்டி நோக்கி சென்ற லாரி தண்ணீர்பந்தல்காட்டில் இருந்த தடுப்புச்சுவர் மீதும், சாலைபணியில் ஈடுபட்டு இருந்த ஆயில்பட்டியை சேர்ந்த ராணி (45) என்ற பெண் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ராணியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாலைமறியல்

இதை அப்பகுதி மக்கள் பார்த்து காயமடைந்த ராணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் போன லாரியை காட்டுக்கொட்டாய் பகுதியில் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் தண்ணீர்பந்தல்காடு பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்தை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேகத்தடை அமைக்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், இதனால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலைமறியல் காரணமாக ராசிபுரம்–ஆத்தூர் பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (நாமகிரிப்பேட்டை), சசிக்குமார் (வெண்ணந்தூர்) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேகத்தடை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக பொதுமக்கள் 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்