‘அந்த’ வார்த்தையை முதன் முதலாய் அறிந்தபோது...

எவ்வளவுதான் நாகரிகம் வளர்ந்திருப்பதாக நாம் கருதினாலும், ‘செக்ஸ்’ என்பது இன்றைக்கும் பொதுவெளியில் பேசத் தயங்கும் வார்த்தையாகத்தான் உள்ளது.

Update: 2016-12-25 11:02 GMT
வ்வளவுதான் நாகரிகம் வளர்ந்திருப்பதாக நாம் கருதினாலும், ‘செக்ஸ்’ என்பது இன்றைக்கும் பொதுவெளியில் பேசத் தயங்கும் வார்த்தையாகத்தான் உள்ளது.

ஆனால், ‘செக்ஸ்’ என்ற வார்த்தையோ பலருக்கு  ஆர்வத்தையும் குறுகுறுப்பையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஹார்மோன்கள் துள்ளாட்டம் போடும் இளம் பருவத்தினருக்கு.

‘செக்ஸ்’ என்ற வார்த்தையை அறிந்தது எப்போது? அப்போது எப்படி இருந்தது என்று சில இளநெஞ்சங்கள் சொல்கிறார்கள்...

தனது அண்ணனின் செல்போனுக்கு வந்த ஒரு மெசேஜில்தான் ‘செக்ஸ்’ என்ற வார்த்தையை முதன்முதலில் பார்த்ததாகக் கூறுகிறார், டீனேஜ் மாணவரான பிரமோத் குமார். தனது பள்ளி நண்பர்களிடம் அதுபற்றிக் கேட்டாராம். ஆனால் அவர்களால் அதற்கு தெளிவான அர்த்தத்தைக் கூற முடியவில்லை என்கிறார். ‘சில படங்களில் வந்த பிரசவ காட்சிகள் மூலம் குழந்தை எப்படிப் பிறக்கிறது என்று நான் தெரிந்து கொண்டேன். சில பெரிய பசங்களின் பேச்சை ஒட்டுக் கேட்டதும் அதுபற்றி தெரிந்து கொள்ள உதவியது’ என்று நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார், பிரமோத். இந்த விஷயத்தில், உயிரியல் பாடப் புத்தகம் அவரது ஞானத்தை விரிவாக்கியதாம். ‘‘நம் நாட்டில் இந்த வார்த்தையை ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை.  பெற்றவர்கள், பெரியவர்கள் முன்னிலையில் இந்த வார்த்தையைச் சொல்ல ஒரு மாதிரியாக இருக்கிறதுதான்’’ என்கிறார், பிரமோத் குமார்.

‘‘எட்டாம் வகுப்பில், மனித உடலமைப்பு பற்றிப் படித்தபோதுதான் நான் ‘செக்ஸ்’ என்ற வார்த்தையை முதன்முதலாக அறிந்தேன் என்கிறார், வித்யா. ஆரம்பத்தில் அந்த வார்த்தை புதிதாகவும், சொல்லக்கூடாத வார்த்தை போலவும் தோன்றியதாம். சக மாணவிகளிடம் பேசப் பேச நாளடைவில் அந்த வார்த்தை சரளமாகிவிட்டது”  என்கிறார். ‘‘நான் பள்ளியில் நடக்கும் எல்லா விஷயத்தையும் வீட்டில் எங்கம்மாவிடம் சொல்லி விடுவேன். ஆனால் செக்ஸ் என்ற வார்த்தை எனக்குள் எழுப்பிய சலசலப்பை மட்டும் அம்மாவிடம் சொல்லத் தயங்கினேன்’’ என்கிறார். ‘‘ஒரு கட்டத்தில், செக்ஸ் என்பது ஒருவர் மீது நாம் காட்டும் அன்பு என்று புரிந்து கொண்டிருந்தேன். ஆனால் சில ஆங்கிலப் படங்கள் வாயிலாக, ‘அதில்’ இன்பமும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்’’ என்று கொஞ்சம் முகம் சிவக்கக் கூறுகிறார், வித்யா.

பொறியியல் மாணவரான சிவராஜ், ‘‘குழந்தைகளை வீட்டு வாசலில் பறவைகள்தான் கொண்டு வந்து போடும் என்று கார்ட்டூன் படங்களைப் பார்த்து நம்பிக் கொண்டிருந்தேன்’’ என்று சிரிக்கிறார். ‘புளூ பிலிம்’ என்ற வார்த்தைக்குப் பின், ‘செக்ஸ்’ என்ற வார்த்தையையும் இவரிடம் முதலில் கூறியது  நண்பர்களும் சீனியர்களும்தானாம். ஆர்வம் உந்தித் தள்ள, அதைப் பற்றி கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார். ‘‘நான் முதன்முதலில் ஆபாசப் படம் பார்த்தது ஒரு மோசமான அனுபவம். ஆனால் அதன் மூலமாகத்தான் நான் செக்ஸ் பற்றி அறிந்தேன்’’ என்கிறார் இந்த 19 வயது மாணவர். தற்போது ‘செக்ஸ்’ பற்றித் தனது நண்பர்களுடன் பேசுவதில் தனக்கு சங்கடம் ஏதுமில்லை என்றும் கூறுகிறார்.

ரீனா, தனது 12 வயதில் ஒரு தோழி சொல்லித்தான் ‘நாமெல்லாம் எப்படிப் பிறக்கிறோம்’ என்று தெரிந்தது என்கிறார். இப்போது 16 வயதாகும் இவர், ‘‘அதற்கு முன்பெல்லாம், பெற்றோர் மோதிரம் மாற்றிக்கொள்வதால்தான் குழந்தை பிறக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிஜத்தில், பெற்றோரின் சேர்க்கையில் குழந்தை எப்படிப் பிறக்கிறது என்று அறிந்ததும் எனக்கு வயிறு ஒரு மாதிரி பண்ணியது. ஒரு வார காலத்துக்கு, எங்கப்பா, அம்மாவிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன். ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று என் அம்மா திரும்பத் திரும்ப நச்சரிக்க கடைசியில், ‘ஏம்மா... நான் கேள்விப்பட்டது உண்மையா?’ என்று கோபத்தில் வெடித்து விட்டேன். ‘என்ன கேள்விப்பட்டே?’ என்ற அம்மாவிடம் நான் சொல்ல, அவர் உரக்கச் சிரித்தார். பின், என்னை அன்போடு முத்தமிட்டு, செக்ஸ் என்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் அன்பான ஒரு செயல்பாடு என்றார். அதன்பிறகுதான் நான் சமாதானமானேன். அடுத்த சில ஆண்டுகளில், பள்ளியும், உயிரியல் பாட வரைபடங்களும் ‘செக்ஸ்’ என்பதை மேலும் தெளிவாக்கின’’ என்கிறார்.

ஒரு பெண்ணுக்கு ஆண் முத்தமிட்டால் குழந்தை பிறந்து விடும் என்பதுதான் ரேஷ்மாவின் நம்பிக்கையாக இருந்ததாம். ‘‘எனது பெற்றோர் இதுபற்றி எனக்கு விளக்கிச் சொன்னால் தான் என்ன? என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்’’ என்று நாணம் படரச் சொல்கிறார் இவர். அறிவியல் ஆசிரியர் சொல்லித்தான் தான் அந்த வார்த்தையை முதன்முதலில் கேட்டதாகச் சொல்கிறார். அப்புறம் அதுபற்றி அவரது தோழிகள் பேசினார்களாம். ‘‘ஆரம்பத்தில் ‘செக்ஸ்’ என்பது கொஞ்சம் நிரடலாக இருந்தாலும், அது ஓர் இயற்கையான உயிரியல் செயல்பாடு என்று புரிந்து கொண்டேன்’’ என்கிறார், தற்போது சமூகவியல் பயிலும் ரேஷ்மா. பாலியல் குறித்து டீன்ஏஜ் பருவத்திலேயே பயிற்று விக்கப்பட வேண்டும், அதில் பெற்றோருக்கும் பொறுப்பு இருக்கிறது என்கிறார் இவர். ‘‘இப்போதெல்லாம் தோழிகளாகிய  நாங்கள் பொதுவாகப் பேசிக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று, செக்ஸ். எனவே அது குறித்து விவாதிப்பதில் தற்போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’’ என்று புன்னகை முகமாகக் கூறுகிறார், ரேஷ்மா.

மேலும் செய்திகள்