தாமிரபரணியில் சரக்கு போக்குவரத்து

நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும். எனவே சாத்தியம் இல்லாதது என்று எதுவும் இல்லை. முயன்றால் எதுவும் சாத்தியம் ஆகலாம்.ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை, வானத்தில் பறந்து செல்ல முடியும் என்று சொன்னால் யாராவது நம்பி இருப்பார்களா? பறவையை பார்த்து மனிதன் விமானத்தை படைத்தான். இப்படித்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் ஒவ்வொன்று தூண்டு கோலாக இருந்திருக்கிறது.

Update: 2016-12-25 07:50 GMT
டக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும்.

எனவே சாத்தியம் இல்லாதது என்று எதுவும் இல்லை. முயன்றால் எதுவும் சாத்தியம் ஆகலாம்.

ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை, வானத்தில் பறந்து செல்ல முடியும் என்று சொன்னால் யாராவது நம்பி இருப்பார்களா? பறவையை பார்த்து மனிதன் விமானத்தை படைத்தான். இப்படித்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் ஒவ்வொன்று தூண்டு கோலாக இருந்திருக்கிறது.

சுமார் 20 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தால் குறைந்தபட்சம் 14 மணி நேரம் ஆகும். ஆனால் இப்போது ஆம்னி பஸ் என்றால் 8 மணி நேரத்தில் வந்துவிடமுடியும்.

அதற்கு ஏற்ப இப்போது சாலை வசதி பெருகி இருக்கிறது. நாட்டின் ரத்த நாளங்களாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் தரம் மேம்பட்டு இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

நாட்டில் சாலைகள் விசாலமாகவும், நேர்த்தியாகவும் இருந்தாலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. வாகனங்களின் நெரிசலால் சாலைகள் திணறுகின்றன.

சரக்கு போக்குவரத்தில் சாலைகளும், ரெயில் பாதைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரக்கு போக்குவரத்துக்கென்று தனியாக ரெயில் பாதை அமைக்கும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது.

போதிய சாலை மற்றும் ரெயில் பாதை வசதி இல்லாத காலத்தில் உள்நாட்டில் ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் மூலமாகவே சரக்கு போக்குவரத்து நடைபெற்றது.

சாலை மார்க்கமாகவும், சரக்கு ரெயில்கள் மூலமும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு செலவு அதிகமாவதோடு காலவிரயமும் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசும் அதிகம் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு நீர்வழி போக்குவரத்துக்கு ஊக்கம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. சாத்தியம் உள்ள இடங்களில் ஆறுகளில் சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை பெரிய அளவில் செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

நம் நாட்டில் ஏற்கனவே சில நதிகளில் சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது.

இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையம் நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துகிறது.  

நதிகள் மற்றும் கால்வாய்கள் வழியான நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நீர்வழிப் போக்குவரத்து மசோதாவுக்கு கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் 106 நதிகள் தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 5 நீர்வழிப்பாதைகள் செயல்பாட்டில் உள்ளன.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 106 தேசிய நீர்வழிப்பாதை திட்டங்களில், 6 திட்டங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

அந்த திட்டங்கள் வருமாறு:–

1. தாமிரபரணி தேசிய நீர்வழிப்பாதை திட்டம் (திட்டம் எண்:99)

2. காக்கிநாடா–புதுச்சேரி கால்வாய் (திட்டம் எண்:4)

3. பூவார் கடற்கரையில் இருந்து இரயுமன்துறை வரையிலான திட்டம் (திட்டம் எண்:13)

4. பவானி நீர்வழிப்பாதை (திட்டம் எண்:20)

5. மணிமுத்தாறு நீர்வழிப்பாதை (திட்டம் எண்:69)

6. பாலாறு நீர்வழிப்பாதை (திட்டம் எண்:75)

இவற்றில் தாமிரபரணி தேசிய நீர்வழிப்பாதை திட்டம் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.

இதுபற்றி இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:–

மத்திய அரசு ஏற்கனவே 5 நதிகளை தேசிய நீர்வழிப்பாதையாக அறிவித்தது. சமீபத்தில் மேலும் 106 நதிகளை தேசிய நீர்வழிப் பாதையாக அறிவித்து இருக்கிறது.

கங்கை நதியின் அலகாபாத்–பாகீரதி, பிரம்மபுத்திரா நதி, கொல்லம்–கோழிக்கோடு ஆகிய 3 தேசிய நீர்வழிப்பாதை திட்டங்களின் பணிகள் முடிவடைந்து அவை பயன்பாட்டில் உள்ளன. இந்த நீர்வழிப்பாதைகளில் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

காக்கிநாடா–புதுச்சேரி மற்றும் பிரம்மணிகர்–சுவாதம்ரா ஆகிய இரு நீர்வழிப் பாதைகளுக்கான வரைவு திட்டம் முடிவு செய்யப்பட்டு திட்டப்பணிகள் செயல்பாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட தாமிரபரணி உள்ளிட்ட 106 தேசிய நீர்வழிப்பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடங்கி உள்ளன.

தொழில்நுட்பம், பொருளாதார ரீதியில் இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக பாதிப்பு ஆகியவை பற்றி ஆய்வு செய்யப்படும். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேற்கண்ட நீர்வழிப்பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முடிவு செய்யப்படும்.   

இது தொடர்பான வரைவு அறிக்கைப் பணி முடிவடைய குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகலாம். அதன் பிறகு தேவையான இடங்களில், நதிக்கரையில் வசிக்கும் மக்களை வேறுஇடத்தில் குடியமர்த்துதல் தொடர்பான பிரச்சினை குறித்து மாநில அரசின் ஒத்துழைப்பு கோரப்படும். இந்த திட்டத்தை தொடங்கும் முன் பல்வேறு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க நீண்ட காலம் ஆகலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தாமிரபரணி ஆற்றில் நீர்வழி போக்குவரத்து தொடங்குவது பற்றி சமீபத்தில் டெல்லி மேல்–சபையில் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி மன்சுக் மாண்டவியா சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

நாட்டில் பல பகுதிகளில் பாயும் ஆறுகளில் நீர்வழி போக்குவரத்து தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் நீர்வழி போக்குவரத்து தொடங்கும் நோக்கத்தில், திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சன முதலியார் பாலத்தில் இருந்து புன்னைக்காயல் பகுதி வரை 64 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள நீர்வழிப்பாதையை தேசிய நீர்வழிப்பாதையாக அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்வழிப் போக்குவரத்தை சாத்தியமாக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் இந்த இரு இடங்களுக்கு இடையே அமைந்துள்ள தடுப்பணைகள், பாலங்கள், மின்சார பாதைகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாமிரபரணியின் முகத்துவாரம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது. தாமிரபரணி நதிப்படுகையில் ஏராளமான கனிமவளங்கள் உள்ளன. பிரித்தெடுக்கப்படும் கனிமங்கள் தற்போது, சாலை வழியாக தூத்துக்குடி துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த கனிமங்கள் சாலை வழியாக அனுப்பப்படுவதால் அதிக செலவு ஏற்படுகிறது. தாமிரபரணியில் நீர்வழிப்பாதை ஏற்படுத்தி பெரிய படகுகள் மூலம் கனிமங்களை முகத்துவார பகுதிக்கு எடுத்துச் சென்று, கடல் வழியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் சேர்க்க முடியும். இதனால், போக்குவரத்து செலவு குறையும். எனவே தாமிரபரணி நீர்வழிப்பாதையை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.

தாமிரபரணி நதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மூன்று முக்கிய தொழில் உற்பத்தி மையங்கள் உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘சிப்காட்’ தொழில் பேட்டையில் 71 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தாமிரபரணியில் சரக்கு படகு போக்குவரத்து தொடங்கினால் மேற்கண்ட தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வது எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் தாமிரபரணியின் சுற்றுவட்டார பகுதியில் தூத்துக்குடி நகரம், முயல் தீவு, ரோச் பூங்கா, பனிமயமாதா ஆலயம், திருச்செந்தூர் முருகன் கோவில், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், காந்திமதி–நெல்லையப்பர் கோவில் ஆகிய முக்கியமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.  

எனவே, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த நீர்வழிப்பாதையில் ‘ரோ–ரோ’ எனப்படும் சுற்றுலா படகு போக்குவரத்து வசதிகளை வருங்காலத்தில் ஏற்படுத்துவது பற்றியும் ஆராயப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாமிரபரணியில் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்குவதற்கான மத்திய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது ஆகும். இந்த திட்டம் அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல்பாட்டுக்கு வந்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும், எம்.பி.க்களும் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்துவதோடு முழு ஆதரவும் ஊக்கமும் அளிக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமும் ஆகும்.

தாமிரபரணி

தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழகத்தில் மட்டுமே ஓடி கடலில் கலக்கும் முக்கிய நதி தாமிரபரணி. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவு பகுதியான பொதிகை மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5,659 அடி உயரத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி சுமார் 125 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.

தாமிரபரணியின் குறுக்கே பொதிகை மலையில் காரையார் என்ற இடத்தில் அணை கட்டப்பட்டு உள்ளது. தாமிரபரணி, காரையார் அணையை வந்து சேரும் முன்பு அதனுடன் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு ஆகிய மூன்று சிற்றாறுகள் கலக்கின்றன. காரையார் அணைக்கு 130 அடி உயரத்தில் இருந்து அருவியாக (பாணதீர்த்தம்) தாமிரபரணி நீர் கொட்டுகிறது.

காரையார் அணையில் இருந்து சற்று தொலைவு வந்ததும் தாமிரபரணியுடன் சேர்வலாறு கலக்கிறது. அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் நீர் மின் திட்டம் உள்ளது. அதாவது தாமிரபரணியின் தண்ணீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து சமவெளி பகுதியான பாபநாசத்தை வந்து சேரும் தாமிரபரணி, கிழக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறது.

மாஞ்சோலை மலையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு, தாமிரபரணியின் முக்கிய உபநதியாகும். இந்த நதி ஆலடியூர் என்ற இடத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது. கடனாநதி, ராமநதி, ஜம்புநதி, பச்சையாறு, சிற்றாறு ஆகியவையும் தாமிரபரணியின் முக்கிய உபநதிகள் ஆகும்.

வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு பொருணை என்ற மற்றொரு பெயரும் உண்டு. கோடை காலத்தில் கூட முற்றிலும் வறண்டுவிடாது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவமழை காலங்களிலும் தாமிரபரணி நீர் ஆதாரம் பெறுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். சமீபத்தில் 1992–ம் ஆண்டும், அதன்பிறகு 2015–ம் ஆண்டிலும் தாமிரபரணியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் ஏராளமான நீர் வீணாக கடலில் சென்று கலப்பது உண்டு.

தாமிரபரணியின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 300 ஏக்கர் நிலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்தி 107 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இரு மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பெருமளவில் பூர்த்தி செய்கிறது.

தடுப்பணைகள்

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் பற்றிய விவரம் வருமாறு:–

1. கோடைமேலழகியான் அணை

2. நதியுண்ணி கால்வாய் அணை

3. கன்னடியன் அணை

4. அரியநாயகிபுரம் அணை

5. பழவூர் அணை

6. சுத்தமல்லி அணை

7. மருதூர் அணை

8. ஸ்ரீவைகுண்டம் அணை

மேற்கண்ட 8 தடுப்பணைகளில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 2 தடுப்பணைகள் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.

மருதூர் அணையில் இருந்து பிரிந்து செல்லும் மேலக்கால், கீழக்கால்வாய்கள் மூலம் மொத்தம் 20,540 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் வடகால், தென்கால்வாய் மூலம் மொத்தம் 25,567 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகள் மூலம் மொத்தம் 1,300 குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 53 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

பக்கிங்காம் கால்வாய் உயிர் பெறுமா?

தமிழ்நாட்டின் வடக்கே ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் தொடங்கி சென்னை வழியாக கடற்கரையோரமாக புதுச்சேரி வரை செல்லும் பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போதும், அதற்கு முன்பும் முக்கிய நீர்வழி போக்குவரத்தாக விளங்கியது என்று இப்போது சொன்னால் பலர் நம்பமாட்டார்கள்.

அந்த காலத்தில் இந்த கால்வாயில் படகுகள் மூலம் உணவுப்பொருட்கள், மரங்கள், துணிமணிகள் போன்ற சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் சாலை மற்றும் ரெயில் பாதை வசதிகள் ஏற்பட்ட பிறகு நம்மவர்கள் பக்கிங்காம் கால்வாயை முற்றிலுமாக கைகழுவி விட்டார்கள். இதனால் ஒரு காலத்தில் மிகச்சிறந்த நீர்வழிப்பாதையாக விளங்கிய பக்கிங்காம் கால்வாய் இப்போது ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போய் குறுகி கழிவுநீர் கால்வாயாக பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

நமது அலட்சியத்தால் ஒரு அற்புதமான நீர்வழிப் போக்குவரத்தை நாம் இழந்து விட்டோம். ஒருவேளை ஆங்கிலேயர் ஆட்சி நீடித்து இருந்தால் பக்கிங்காம் நீர்வழிப் போக்குவரத்து உயிர்ப்புடன் இருந்திருக்கலாம்.

இந்த பக்கிங்காம் கால்வாய் திட்டத்தின் மீது மத்திய அரசு இப்போது தனது கவனத்தை திருப்பி இருப்பது சற்று நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

மேலும் செய்திகள்