கிறிஸ்துமஸ் பண்டிகை: முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து ‘வளங்களையும், நலங்களையும் சேர்க்கட்டும்’

கிறிஸ்துமஸ் பண்டிகை எல்லோருடைய இல்லங்களிலும் வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிர

Update: 2016-12-24 23:00 GMT

புதுச்சேரி,

கிறிஸ்துமஸ் பண்டிகை எல்லோருடைய இல்லங்களிலும் வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

நம்பிக்கை விதை

புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம்பிக்கையே நாளைய வாழ்வாக மாறும் என்கிற நம்பிக்கை விதைகளை நாளும் மக்களுக்கு விதைத்தவர் இயேசு பிரான்.

அன்பிற்கும், அர்ப்பணிப்பு உணவிற்கும், இலக்கணமான அவர் அவதரித்த புனித நாளை உறவுகளோடு, கொண்டாடி மகிழ்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுகளோடும், நட்புகளோடும், நேசங்களை பகிர்ந்து கொள்கிற இதுபோன்ற விழாக்கள் ஒரு நாட்டின் பண்பையும், கலாசார உறவுகளையும் வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

வளம் சேர்க்கட்டும்

பகைவருக்கும், அருளும் நல்லிதயம் கொண்ட புனிதர் இயேசுபிரான் பிறந்த இந்த புனித நாளில் அவரது போதனைகளான தியாகம், மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை கடைபிடிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்த திருநாள் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் மற்றும் அனைவரின் இல்லங்களிலும் எல்லா வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஷாஜகான்

அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

கடவுள் நம் அனைவருக்கும் திறமையை கொடுத்துள்ளார். இந்த திறமையை பிறர் நலத்திற்காக நாம் பயன்படுத்தும் போது மனித வாழ்க்கை அர்த்தமுடையதாகிறது. கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் தொண்டும், தூய அர்ப்பணிப்பு உணர்வும் என்றென்றும் போற்றத்தக்கது. அன்னை தெரசா போன்ற தொண்டுள்ளம் கொண்ட தூய ஆத்மாக்களின் வழிகாட்டியாகவே இயேசுபிரான் அவதரித்தார். பாவம் செய்தவர்கள் கூட மனம் திருந்தி வருந்தும் போது மன்னித்து அருள்புரிபவர். இரக்கம் உள்ளவர். இனிமையானவர்.

புதுச்சேரி மாநிலத்தில் கல்வி வளர்ச்சியில் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளின் பங்கு மறுக்க முடியாத ஒன்றாகும். அன்பு, ஒற்றுமை, சகோதர மனப்பான்மை, இவை மூன்றும் மனித குலத்தின் ஆணிவேர். இதனை நாம் அனைவரும் கடைபிடித்து வாழ்வில் வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கந்தசாமி

அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

நாம் வாழும் வாழ்க்கையானது பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது ஒன்றையே அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்பது தான் நம் முன்னோர்களின் அறிவுரை. தீவிரவாதத்தை ஒடுக்க உலகமே ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த இந்தியாவை ஏனைய உலக நாடுகள் ஆதரித்த அந்த வேளையில் நம் அண்டை நாடுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்ததை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது நம் நாடு தான். இவ்வாறு தீவிரவாதத்தை ஒருபக்கம் எதிர்த்தாலும் மறுபக்கம் அன்புடனும், சமாதானத்துடனும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அணுக முழு முயற்சியும் மேற்கொள்வது நம் நாடு மட்டுமே.

இவை அனைத்தும் அன்புடன், சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பதை போதித்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளுடன் ஒத்துப்போவதை நாம் உணர வேண்டும். அத்தகைய போதகரின் பிறப்பை உலகம் கொண்டாடும் இந்த வேளையில் நாம் நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோகுலகிருஷ்ணன் எம்.பி.

கோகுலகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுவை மாநிலத்தில் வாழும் அனைத்து கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிறக்கும் போது குழந்தை இயேசு ஒரு தெய்வக்குழந்தை. அன்பின் சின்னம். அமைதியின் உருவம். அவநம்பிக்கையை அகற்றி ஒளி ஏற்ற பிறந்த குழந்தை.

அந்த குழந்தையின் ஆசியினால் கிறிஸ்தவ மக்கள் அனைத்தும் வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திடவும், பைபிளில் கூறப்பட்டுள்ள வாழ்க்கையின் அனைத்து நல்லொழுக்கத்தின் படி அனைவரும் வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க.

தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஏழை, எளியவர்கள் மீது இருக்கம் கொண்டு அன்பையும், கருணையையும், பொழிந்த இயேசு பெருமான் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை களைந்து அன்பும், சமாதானமும் இந்த மண்ணில் நிலவ நம்மால் இயன்றதை செய்வோம் என்று உறுதி ஏற்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இயேசுபிரான் அவதரித்த இந்த நல்ல நாளில் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும், பாசத்துடனும் அன்பை பரிமாறிக்கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்