அடுத்த மாதம் முதல் முதியோர் உதவித் தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும் முதல்–அமைச்சர் பேச்சு

அடுத்த மாதம் (ஜனவரி) முதல் முதியோர் உதவித் தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகை பயனாளிகளின் வீடு தேடிச்சென்று வழங்கப்படும் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். அலுவலக திறப்பு விழா புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலக திறப்ப

Update: 2016-12-24 22:15 GMT

வில்லியனூர்

அடுத்த மாதம் (ஜனவரி) முதல் முதியோர் உதவித் தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகை பயனாளிகளின் வீடு தேடிச்சென்று வழங்கப்படும் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அலுவலக திறப்பு விழா

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலக திறப்பு விழா மற்றும் நுகர்வோர் தின விழா நேற்றுக் காலை நடைபெற்றது. வில்லியனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி பேசினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்து பேசினார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:–

மக்களின் சிரமத்தை போக்க

புதுவை மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, கிராமப்பகுதி மக்கள் இருந்து புதுச்சேரியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு வந்து, செல்வதில் பெரும் சிரமத்தை அனுபவித்தனர். மக்களின் இந்த சிரமத்தை போக்க 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு அலுவலகம் வீதம் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கனவே ஏம்பலத்தில் அலுவலகம் திறக்கப்பட்டது. இன்று (நேற்று) வில்லியனூரில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.

வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான திருக்காமீசுவரர் கோவில், தென்கலை வரதராஜ பெருமாள் கோவில், திருக்காஞ்சி கங்கவராக நதீசுவரர் கோவில் மற்றும் வில்லியனூர் மாதா கோவில் ஆகியவற்றை சுற்றுலா தலமாக மேம்படுத்த மத்திய அரசின் நிதி உதவியுடன் சுமார் 9 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வீடு தேடிச் சென்று வழங்கப்படும்

அடுத்த மாதம் (ஜனவரி) முதல் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகைகளை நேரடியாக வீடு தேடி சென்று பயனாளிகளிடம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வங்கிகள் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

மத்திய அரசு 500 ரூபாய், மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது. இதனை சரிவர திட்டமிட்டு நடைமுறைப்படுத்தாததால், இன்றுவரை பொது மக்கள் தங்களின் அன்றாட செலவுக்கு பணத்தை பெற வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் நீண்ட கியூவில் நின்று சிரமப்பட்டு வருகிறார்கள். இதுவரை எந்த முதல்–அமைச்சரும் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றதில்லை.

நான் தினமும் ஏ.டி.எம்.மையங்களுக்கு சென்று பார்வையிடுகிறேன். அப்போது மக்கள் நீண்டவரிசையில் நிற்கும்போது ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை தொடர்பு கொண்டு அந்த ஏ.டி.எம். மூலம் பணம் கிடைக்கச்செய்கிறேன்.

கூடுதல் நிதி கேட்டுள்ளேன்

மேலும் மத்திய அரசு கொண்டு ரொக்கப்பணம் இல்லாத, பண அட்டை பரிவர்த்தனை திட்டத்தை, புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்துவதில் குறைபாடுகள், மற்றும் பின்விளைவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜநாத் சிங் மற்றும் நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் ஆகியோரிடம் எடுத்துக்கூறியுள்ளேன். மேலும் புதுச்சேரி மாநில வருவாயில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மட்டும் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியுள்ளது. எனவே காரணமாக புதுச்சேரி மாநிலத்துக்கு இந்த ஆண்டு தர உள்ள நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுள்ளேன். அதற்கு மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் பதில்அளிக்கும்போது, கண்டிப்பாக நிதியை உயர்த்தி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். கூடுதலாக நிதி கிடைத்ததும் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

அமைச்சர் நமச்சிவாயத்தின் வேண்டுகோளை ஏற்று திருவண்டார்கோவிலில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தை, வில்லியனூருக்கு மாற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் குடிமைபபொருள் வழங்கல் துறை செயலாளர் சுந்தரவடிவேலு, துறை இயக்குனர் பிரியதர்ஷினி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் கண்ணபிரான், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அயூப், முரளிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்