கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்தது டிரைவர் படுகாயம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த எடப்பள்ளியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 31). இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை பகுதியில் திருமணம்

Update: 2016-12-24 22:00 GMT

கன்னியாகுமரி

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த எடப்பள்ளியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 31). இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை பகுதியில் திருமணம் நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக அனீஸ் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் ஒரு சொகுசு காரில் காட்டாக்கடை வந்தனர். நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று அதிகாலை சூரியோதயம் பார்த்து விட்டு அனைவரும் ஒரே காரில் ஊருக்கு திரும்பினர். காரை அனீஸ் ஓட்டினார்.

இந்த கார் கொட்டாரத்தை அடுத்த பொற்றையடி பகுதியில் வந்தது. அப்போது திடீரென கார் அனீஸின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி சென்ற அனீஸ் படுகாயம் அடைந்தார். மற்ற 8 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த அனீஸை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்