முறைகேடுகளில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

முறைகேடுகளில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.10

Update: 2016-12-24 22:30 GMT

நாகர்கோவில்

முறைகேடுகளில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்ததைத் தொடர்ந்து ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி சந்தையில் நேற்று நடந்தது.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்று ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை குறித்து விளக்கமளித்தார்கள். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது:–

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இந்த நடவடிக்கை எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி இல்லை. அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் பிரதமர் நரேந்திரமோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். நம்முடைய பணம் வங்கியில் இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்கும்.

ரூ.65 ஆயிரம் கோடி

வங்கிக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லாமல் நாடு எப்படி பொருளாதார வளர்ச்சி அடையும்? இதற்காகவே பிரதமர் நரேந்திரமோடி அனைத்து மக்களையும் வங்கிக்கணக்கு தொடங்க அறிவுறுத்தினார். இதனால் வங்கி அதிகாரிகள் ஏழைகளின் வீடுகளுக்கே சென்று அவர்களை வங்கிக்கணக்கு தொடங்கச் செய்தனர். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் கோடி வங்கிக்கணக்கு தொடங்கினார்கள். ரூ.32 ஆயிரம் கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. இதனையடுத்து அதிக பணம் வைத்திருப்பவர்கள் தங்களது பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார். அதற்கு வரி கிடையாது என்று சலுகையும் அளித்தார். அதன் பிறகு ரூ.65 ஆயிரம் கோடி வங்கியில் செலுத்தப்பட்டது.

தற்போது உள்ள சூழ்நிலையில் சில வங்கிகளில் போதுமான அளவு பணம் கிடைப்பதில்லை. இருப்பினும் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். இது பிரதமர் நரேந்திரமோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அடுத்தபடியாக நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகள் தான் உள்ளனர்.

சிறப்பு பரிசுகள்

நம்முடைய மூதாதையர்கள் காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. பின்னர் பணம் வந்தது. தற்போது ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை வந்துள்ளது. இதற்காக வங்கிகள் பல கார்டுகளை வழங்குகின்றன. இதன் மூலம் மக்கள் பொருட்கள் வாங்க கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கார்டை கொண்டு சென்றால் வங்கியையே அழைத்துச் செல்வது போல் இருக்கும்.

ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் நிர்வாகிகள் தேவ், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

முன்னதாக, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் அணுகுசாலையில் ரூ.8 லட்சம் மதிப்பில் அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் பா.ஜனதா வேகமாக வளர்ந்து வருகிறது. தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடந்துள்ளது. அதிகாரிகள் அவரவர் கடமைகளை செய்கிறார்கள். இதை குறை கூறுபவர்கள் அரசியல் உள்நோக்கத்திற்காக கூறுகிறார்கள். நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி அ.தி.மு.க.வை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறியது, அவர் சரியாக புரிதல் இல்லாததால் பேசியுள்ளார். தமிழகத்தில் 4 வழிச்சாலைகள் ஆறு வழிசாலைகளாக மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலாவதாக சென்னை முதல் திருச்சி வரை 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

குளச்சல் இனயம் வர்த்தக துறைமுகத்திற்கான சர்வே பணி நடந்து வருகிறது.

சாலை வசதிகள்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாலை விபத்துகள் நடக்கிறது. இந்த விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கோட்ட பொறுப்பாளர் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் மணிசாமி, சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்