கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 4,647 விவசாயிகளுக்கு ரூ.21¾ கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 2–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை 4 ஆயிரத்து 647 விவசாயிகளுக்கு ரூ.21 கோடியே 79 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி

Update: 2016-12-24 21:30 GMT

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 2–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை 4 ஆயிரத்து 647 விவசாயிகளுக்கு ரூ.21 கோடியே 79 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பயிர் கடன்

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் தற்போது நிலவி வரும் பண நெருக்கடி சூழ்நிலை காரணமாக விவசாயிகள் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணியினை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற இயலாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு காணும் விதமாக, தமிழக அரசு தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை, மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு ஒன்றினை தொடங்க வைத்துள்ளது. அதன் மூலம் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்து மாநிலத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகள் தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக தற்போது வாரத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் அவர்களுடைய மொத்த கடன் தொகையில் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.21¾ கோடி கடன்

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 2–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை 4 ஆயிரத்து 647 விவசாயிகளுக்கு ரூ.21 கோடியே 79 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 4 ஆயிரத்து 647 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் உரக்கடன்களும், கடனுதவி பெற்ற 2 ஆயிரத்து 162 விவசாயிகளுக்கு பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் பயிர் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன்களில் தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்