கொருக்குப்பேட்டையில் உதவித்தொகை பெற வரிசையில் நின்றவர்கள் இடையே தள்ளுமுள்ளு போலீசாருடன் வாக்குவாதம்

கொருக்குப்பேட்டையில் உதவித்தொகை பெற வரிசையில் நின்ற முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2016-12-23 22:41 GMT
ராயபுரம்,

கொருக்குப்பேட்டையில் உதவித்தொகை பெற வரிசையில் நின்ற முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உதவித்தொகை

சென்னை ராயபுரம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதியோர், விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கியில் பணத்தட்டுப்பாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள், தங்களுக்கு உதவித்தொகை வழங்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று கொருக்குப்பேட்டை மண்ணப்ப தெருவில் உள்ள அரசு பள்ளியில் வருவாய்த்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் மூலம் கடந்த 3 நாட்களாக ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தள்ளுமுள்ளு

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி முதலே முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெறுவதற்காக மண்ணப்ப தெருவில் உள்ள அரசு பள்ளி முன் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் வங்கி அதிகாரிகள், ஏராளமானவர்கள் வரிசையில் நிற்பதை பார்த்து விட்டு ஒரு நாளைக்கு 200 பேருக்கு மட்டும் பணம் வழங்க முடியும் என்று கூறினர்.

இதனால் வரிசையில் நின்ற அனைவரும் தங்களுக்குத்தான் முதலில் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறி ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டனர். முதலில் சென்று உதவித்தொகை பெற அவர்கள் போட்டி போட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாருடன் வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கொருக்குப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதவித்தொகை வாங்க வந்தவர்களை வரிசையில் நிற்க வலியுறுத்தினர். இதனால் உதவித்தொகை வாங்க நின்ற பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு திரண்டு நின்ற அனைவரும் தங்களுக்கு உதவித்தொகை வேண்டும் என்று கூறியதால் யாருக்கும் உதவித்தொகை வழங்கப்படாது என அறிவித்து விட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்று விட்டனர். இதனால் காலையில் இருந்து கால்கடுக்க நீண்ட வரிசையில் காத்து நின்ற பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் உதவித்தொகை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 

மேலும் செய்திகள்