தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்புகள் வைத்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி சேலம் அருகே பரபரப்பு

சேலம் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்புகளை வைத்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதி திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை சுமார்

Update: 2016-12-23 23:15 GMT

சேலம்

சேலம் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்புகளை வைத்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயிலை கவிழ்க்க சதி

திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் சேலம்– தர்மபுரி மாவடடட எல்லையான தொப்பூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தது. ரெயிலை டிரைவர் ஜார்ஜ் ஓட்டி வந்தார். அப்போது திடீரென தண்டவாளத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான சத்தம் வந்தது. இதனால் சந்தேகமடைந்த டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

அப்போது சற்று தூரத்தில் தண்டவாளத்தில் கான்கிரீட்டால் ஆன 10 சிலாப்புகள் வைக்கப்பட்டிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் ரெயிலின் வேகத்தை மேலும் குறைத்து ரெயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் தண்டவாளத்தில் இருந்த 3 சிலாப்புகளை உடைத்து கொண்டு ரெயில் சற்று தூரத்தில் நின்றது. டிரைவர் சமார்த்தியமாக செயல்பட்டு ரெயிலின் வேகத்தை குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் மர்மநபர்கள் தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்புகளை வைத்திருப்பதை அறிந்து ரெயிலில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு ரெயில் புறப்பட்டது. பின்னர் தொப்பூர் ரெயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அங்கு சென்ற ரெயில்வே தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ரெயில் சக்கரங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தால் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் ½ மணிநேரம் தாமதமாக சென்றது.

இதையடுத்து தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் உடைந்து சிதறி கிடந்த கான்கிரீட் சிலாப்புகளை அகற்றினார்கள். இதுதொடர்பான விசாரணையில் அவை டிராலியை தண்டவாளத்தில் இருந்து இறக்குவதற்கு பயன்படும் 4 அடி நீளம் கொண்ட கான்கிரீட் சிலாப்புகள் என தெரியவந்தது. ரெயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் சதி செய்து அந்த கான்கிரீட் சிலாப்புகளை ரெயில் தண்டவாளத்தில் மர்ம ஆசாமிகள் வைத்தார்களா? என்பது குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலை சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன், போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கோவை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன், சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் அழகு, தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த சிலாப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இந்த பகுதியில் மர்ம நபர்கள் ரெயிலை கவிழ்க்க சதி செய்தார்களா? அல்லது குடிபோதையில் சிலாப்புகளை ரெயில் தண்டவாளத்தில் யாராவது வைத்தார்களா? என்பது குறித்தும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்