குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி

Update: 2016-12-22 23:00 GMT
குலசேகரம்,

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:–

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

குலசேகரம் அருகே உள்ள கடையாலுமூடு கட்டாவிளையை சேர்ந்தவர் சிந்து குமார் (வயது 52), விவசாயி. இவருடைய மகன் சுர்ஜித் (17). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். மேலும் அவர் மாலையில் டியூசனுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் மாலை சுர்ஜித் டியூசனுக்கு சென்றார். டியூசன் முடிந்த பின்பு மகனை அழைத்து வருவதற்காக சிந்துகுமார் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு மகனை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டார்.

இவர்கள் கொல்லங்குடி பகுதியில் சென்ற போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் குலசேகரம் மாடத்தூர்கோணம் கொடுவாஞ்சியை சேர்ந்த ஜெகன் (24), இவரது நண்பர் அனிஷ் ஆகியோர் வந்தனர். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

2 பேர் பலி

இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், சிந்துகுமார், ஜெகன் ஆகியோர்  இறந்து விட்டதாக கூறினர்.

படுகாயம் அடைந்த மாணவன் சுர்ஜித், அனிஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அனிஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்