பயிர்கள் கருகியதால் மனவேதனை: மயங்கி விழுந்த விவசாயி சாவு

பயிர்கள் கருகியதால் மனவேதனை: மயங்கி விழுந்த விவசாயி சாவு

Update: 2016-12-22 22:45 GMT
வாய்மேடு,

பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்த வாய்மேட்டை சேர்ந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.

மன வேதனை

காவிரி டெல்டா கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மேட்டூர் அணையை நம்பி குறுவை சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது. அதைதொடர்ந்து தாமதமாக திறந்துவிடப்பட்ட மேட்டூர் அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் நேரடி நெல்விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வயலுக்கு பாய்ச்சும் அளவுக்கு வரவில்லை. விவசாயிகள் வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என்று நம்பினர். ஆனால் பருவமழையும் விவசாயிகளை ஏமாற்றிவிட்ட நிலையில், நாகை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த அனைத்து வயல்களிலும் நாற்று பதத்திற்கு முளைத்து வந்த நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் சாகுபடிக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமலும், பயிர்கள் கருகியதை கண்டும் மனவேதனையில் அதிர்ச்சியில் இறக்கின்றனர். இதனால் டெல்டாவில் நாளுக்குநாள் விவசாயிகளின் சாவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

விவசாயி சாவு

இந்நிலையில் நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் பாரதியார் நகரை சேர்ந்த விவசாயி நடராஜன் (வயது65), பன்னாள் மேலக்காடு பகுதியை சேர்ந்த சபரீஸ்வரன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 2 ஆண்டுகளாக சாகுபடி செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் நடராஜன் வயலுக்கு சென்றார். அப்போது வயலில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி கிடப்பதை பார்த்து மனவேதனை அடைந்த அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன நடராஜனுக்கு நாகம்மாள் (60) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்