கும்பகோணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

கும்பகோணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2016-12-22 20:49 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

கும்பகோணம் அருகே களம்பரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக பாத்திரக்குடியைச் சேர்ந்த சங்கர் என்பவர் உள்ளார். விளந்தகண்டம், கோவிலாச்சேரி, புத்தூர், அணக்குடி, களம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சங்கத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளில் தகுதியானவர்களுக்கு மீண்டும் கூட்டுறவு கடன் வழங்கவேண்டும். புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், ஒரே குடும்பத்தில் உள்ள 10 நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்தும், கோடிக் கணக்கான பணத்தை நகைக் கடன், விவசாயக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஊழல் செய்ததைக் கண்டித்தும், மாவட்ட கலெக்டர் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முற்றுகைப்போராட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளிருப்பு போராட்டம்

இதுதொடர்பாக மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளர் தயாளன் தலைமையிலும், களம்பர தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதற்கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என உறுதி மொழி கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் ர.சந்திரசேகரன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட துணை செயலாளர் ஞானசேகரன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் புத்தூர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் புனிதாசிவா மற்றும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு வந்து புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கோரினர். அப்போது தலைவர் கூறினால்தான் சேர்க்கமுடியும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் 26-ந்தேதி புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்