கிருஷ்ணராயபுரம் அருகே மணல் வழங்காததை கண்டித்து லாரி டிரைவர்கள் சாலை மறியல் போலீசார் தடியடி நடத்தியதால் கல்வீசி தாக்குதல்; ஏட்டு படுகாயம்

கிருஷ்ணராயபுரம் அருகே மணல் வழங்காததை கண்டித்து லாரி டிரைவர்கள் சாலை மறியல் போலீசார் தடியடி நடத்தியதால் கல்வீசி தாக்குதல்; ஏட்டு படுகாயம்

Update: 2016-12-22 23:00 GMT
கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் அருகே 3 நாட்கள் ஆகியும் மணல் வழங்கப்படாததை கண்டித்து, லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் ஏட்டு ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மணல் குவாரி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திருக்காம்புலியூரில் மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து மணல் அள்ளி செல்வதற்காக கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், கோபி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு டோக்கன் வழங்கப்பட்ட பிறகு, டிரைவர்கள் திருக்காம்புலியூர் மணல் குவாரிக்கு வந்து லாரிகளில் மணல் அள்ளி செல்வர்.

சாலை மறியல்

இந்நிலையில் மாயனூரில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் மணல் அள்ளி செல்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் காத்திருந்தன. ஆனால் கடந்த 3 நாட்களாக மணல் வழங்க டோக்கன் வழங்கப்படவில்லை. டோக்கன் வழங்கப்பட்ட லாரிகளுக்கும் மணல் வழங்கப்படவில்லை.

3 நாட்களாக மணல் வழங்காமல் இருந்ததால், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் லாரி டிரைவர்கள் திண்டாடும் நிலைமை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர்கள், மணல் வழங்காததை கண்டித்து, கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தடியடி- கல்வீசி தாக்குதல்

இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் லாரி டிரைவர்கள் மறியலை தொடர்ந்தனர். இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

போலீசார் தடியடி நடத்தியதால் லாரி டிரைவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். அதன்பின்னர் தடியடி நடத்திய போலீசாரை நோக்கி லாரி டிரைவர்கள் கல்வீசி தாக்கினர். இதில் ரோந்து போலீஸ் ஏட்டு ரத்தினகிரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மற்ற போலீசார் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அலுவலகங்கள் தீ வைத்து எரிப்பு

மேலும் ஆத்திரம் அடங்காத லாரி டிரைவர்கள், லாரிகள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மணல் லோடுக்கு டோக்கன் வழங்கும் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கிருந்த ஓலையால் அமைக்கப்பட்டு இருந்த 3 அலுவலகங்களை தீவைத்து எரித்தனர். இதனால் சிறிது நேரத்தில் மாயனூர் லாரிகள் நிறுத்தும் இடம் கலவர பூமியாக மாறியது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில், அதிரடி படையினர் மற்றும் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகேசன் ஆகியோர் அங்கு முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்