அரசு உதவித்தொகையை வங்கி வழங்கவில்லை என்று கூறி முதியோர்கள் திடீர் சாலை மறியல் செந்தாரப்பட்டியில் பரபரப்பு

தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியின் மூலம் முதியோர் உதவித்தொகையை பயனாளிகள் பெற்று வந்தனர். இவர்களுக்கு உதவித்தொகை வழங்க வங்கி நிர்வாகம் 3 பெண்களை பணிக்கு அமர்த்தி அவர்கள் மூலம் பணத்தை வினியோகம் செய்தது. இந்த நிலையில் கடந்த சில

Update: 2016-12-22 21:45 GMT

தம்மம்பட்டி,

தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியின் மூலம் முதியோர் உதவித்தொகையை பயனாளிகள் பெற்று வந்தனர். இவர்களுக்கு உதவித்தொகை வழங்க வங்கி நிர்வாகம் 3 பெண்களை பணிக்கு அமர்த்தி அவர்கள் மூலம் பணத்தை வினியோகம் செய்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் இருக்கும் பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை பலருக்கு வழங்கவில்லை என்று கூறி செந்தாரப்பட்டியில் உள்ள அந்த வங்கியை நேற்று பயனாளிகள் முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கிருந்த அலுவலர்களிடம் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று கூறி புகார் செய்தனர். ஆனால் உதவித்தொகை வழங்கி வரும் பெண் ஊழியர்கள் மூலம் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பணம் தட்டுப்பாட்டு காரணத்தினால் சிலருக்கு மட்டும் கடந்த 2 மாத பணம் மட்டும் தான் பாக்கி உள்ளது என்றும் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயனாளிகள் வங்கி முன்பு செந்தாரப்பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு பணம் வழங்காமல் வழங்கியது போல் வங்கி ஊழியர்கள் கணக்கை காட்டியுள்ளார்கள் என கூறியும், அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வங்கி மேலாளர் உதவித்தொகை அனைவருக்கும் வருகிற திங்கட்கிழமைக்குள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அங்கு மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்