வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.48 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர். டிராவல்ஸ் நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள சோழகன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 39). இவர் ராமநாத
ராமநாதபுரம்,
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
டிராவல்ஸ் நிறுவனம்ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள சோழகன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 39). இவர் ராமநாதபுரத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததோடு, வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்புவதாக கூறிவந்தாராம். இவரின் நம்பிக்கை வார்த்தையை நம்பி தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அபுபக்கர் மகன் அகமது என்பவரும் அதேபகுதியை சேர்ந்த சிலரும் வெளிநாட்டிற்கு அனுப்புமாறு கூறினர்.
இதனை தொடர்ந்து மோகன்ராஜ் வளைகுடா நாட்டிற்கு நல்ல சம்பளத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி அகமது உள்ளிட்ட 7 பேரிடம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கினாராம். ஆனால் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து அகமது உள்ளிட்டோர் கேட்டபோது 7 பேருக்கும் விசா கொடுத்துள்ளார். இந்த விசாவை பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடு சென்றுவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்தபோது மீண்டும் அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த 7 பேரும் விசாரித்தபோது அது காலாவதியான விசா என்பது தெரியவந்தது.
விசாரணைஇதுகுறித்து மோகன்ராஜிடம் கேட்டபோது முறையான பதில் தெரிவிக்காமல் மிரட்டல் விடுத்ததோடு பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்துவிட்டாராம். சில நாட்களில் ராமநாதபுரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதனால் ஏமாற்றம் அடைந்த அகமது உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.
இந்தநிலையில் மோகன்ராஜ் இதேபோன்று பணத்தை வாங்கிக்கொண்டு காலாவதியான விசாவை கொடுத்து மோசடி செய்து விட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது மோகன்ராஜ் ராமநாதபுரம் மட்டுமல்லாது விருதுநகர், சிவகாசி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தியும், ஏஜென்டுகள் மூலமும் 87 பேரிடம் ரூ.48 லட்சத்து 3 ஆயிரம் வரை பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டு காலாவதியான விசாவை கொடுத்து ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழகம் முழுவதும் பல லட்சம் மோசடி செய்த மோகன்ராஜை பிடித்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.
கைதுஇந்தநிலையில் மோகன்ராஜ் அறந்தாங்கி பகுதியில் புதிதாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அங்கும் ஏராளமானோரிடம் பணம் வாங்கி கொண்டு காலாவதியான விசா கொடுத்துள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அறந்தாங்கிக்கு சென்று மோகன்ராஜை அவருடைய டிராவல்ஸ் நிறுவனத்தில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.