புதுச்சேரியில் அதிகாரப் போட்டி: கிரண்பெடி– நாராயணசாமி மோதல் முற்றுகிறது

புதுச்சேரியில் அதிகாரப்போட்டி காரணமாக கவர்னர், முதல்–அமைச்சர் இடையேயான மோதல் முற்றுகிறது. அதிகாரம் என்ன? புதுவை மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் புதுவை மாநிலத்தின் புதிய கவர்னராக

Update: 2016-12-21 23:00 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் அதிகாரப்போட்டி காரணமாக கவர்னர், முதல்–அமைச்சர் இடையேயான மோதல் முற்றுகிறது.

அதிகாரம் என்ன?

புதுவை மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் புதுவை மாநிலத்தின் புதிய கவர்னராக டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பெடி நியமிக்கப்பட்டார்.

அப்போதே புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்படும் என்று மக்களால் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் புதிய அரசு பதவியேற்ற நிலையில், கவர்னரின் அதிகாரம் என்ன என்பது அவருக்கும், அமைச்சரவையின் அதிகாரம் என்ன என்பது எங்களுக்கும் தெரியும். அதன்படியே நாங்கள் செயல்படுவோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி அவ்வப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரிவிக்காமல் அவர்கள் சார்ந்த துறைகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியதுடன், எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்காமல் அவர்களது தொகுதிகளில் குறைகளை பார்வையிடுவது என சென்று வந்தார். கவர்னரின் இந்த செயல்பாடுகள் ஆளுங்கட்சி மட்டுமல்லாது எதிர்க்கட்சிகள் மட்டத்திலும் விமர்சிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக கவர்னர் செயல்படுவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில் வம்பாகீரப்பாளையம் கடற்கரைக்கு புதுச்சேரி மெரீனா பீச் என்று கவர்னர் பெயர் சூட்டினார். சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் புகார்கள் சென்றன.

பகிரங்க குற்றச்சாட்டு

இதற்கிடையே காரைக்காலில் ஜிப்மர் வளாக திறப்பு விழாவின்போது பேசிய அமைச்சர் கந்தசாமி, கவர்னரும், முதல்–அமைச்சரும் மத்திய அரசிடம் வலியுறுத்தியும் நிதி வரவில்லை என்று கவர்னரை மேடையில் வைத்துக்கொண்டே பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய கவர்னர் கிரண்பெடி, அமைச்சர்கள் சிக்கனமாக செலவுகளை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆனால் அதற்கு மறுநாளே புதுவை மீன்பிடி துறைமுகத்தில் மணல் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கந்தசாமி, கவர்னரின் நடவடிக்கையால் மீன்பிடி துறைமுகம் காலதாமதமாக தூர்வாரப்படுவதாகவும், இதனால் மீனவர்களுக்கு ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

பதிலுக்குப் பதில்

இதன்பிறகும் கவர்னருக்கும் அமைச்சரவைக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றே முதல்–அமைச்சர் நாராயணசாமி மறுத்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பேட்டியளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு பண அட்டை மூலம் வியாபாரிகள் வர்த்தகங்களை செய்ய புதுவை அரசை வலியுறுத்துவதாகவும், மக்கள் விரும்பாத இதுபோன்ற திட்டங்களை திணிப்பதை ஏற்கமாட்டோம். இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நாராயணசாமி பேட்டியளித்த சில மணி நேரத்திலேயே பணமில்லா பரிவர்த்தனை தொடர்பாக செயல்விளக்க கூட்டத்தை அதிகாரிகளை கொண்டு கம்பன் கலையரங்கத்தில் கவர்னர் கிரண்பெடி நடத்தினார்.

இந்தநிகழ்ச்சியில், பணமில்லா பரிவர்த்தனை என்ற மத்திய அரசின் திட்டம் எதிர்காலத்துக்கு அவசியமானது. புதுவையில் பணமில்லா வர்த்தக முறையை அமல்படுத்துவது எளிது என்று நாராயணசாமியின் பேட்டிக்கு எதிரான கருத்துகளை கவர்னர் தெரிவித்தார்.

பனிப்போர் வெடித்தது

இதன்மூலம் கவர்னருக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையே நடந்து வரும் பனிப்போர் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மோதல் இருவருக்கும் இடையேயான அதிகாரப்போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் பாடு திண்டாட்டமாகியுள்ளது.

மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரின் உத்தரவுகளை செயல்படுத்துவதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்–அமைச்சரான நாராயணசாமியின் உத்தரவுகளை செயல்படுத்துவதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்