சுரண்டை அருகே நடந்த நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு

சுரண்டை அருகே நடந்த நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு

Update: 2016-12-21 23:00 GMT
நெல்லை,

சுரண்டை அருகே நடந்த நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

நிதி நிறுவன அதிபர்


நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குருங்காவனம் வேளார் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்ற பெரியசாமி பாண்டியன்(வயது 58). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவரிடம் சுரண்டை ஆலடிப்பட்டியை சேர்ந்த சீனி மகன் முருகன், வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். இதற்காக தனது வீட்டை எழுதி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் வட்டி அதிகமாகி விட்டதால் பெரியசாமி பாண்டியனிடம் வாங்கிய பணத்தை முருகன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் முருகனின் வீட்டை பெரியசாமி பாண்டியன் எடுத்துக்கொண்டார். இதில் மனம் உடைந்த முருகன் இறந்து விட்டார்.

கொலை செய்ய ஏற்பாடு


வட்டிக்கு பணம் வாங்கியதால் முருகன், வீட்டை இழந்ததுடன் பின்னர் அவரும் இறந்தது ஆகிய சம்பவத்தால் அவருடைய தம்பிகள் கரையடி மாடசாமி(46), திருமலை(42) ஆகியோர் மிகுந்த மனவருத்தம் அடைந்தனர். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது அண்ணனின் சாவுக்கு காரணமான பெரியசாமி பாண்டியனை வெட்டிக்கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக இடையர்தவணை அருகே உள்ள இ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த சாமி என்ற ஆறுமுகசாமி(26), ரமேஷ்(28), மயில்ராஜ்(30), ஆனந்தராஜா என்ற ஆனந்த்(21), மாடசாமி(23) ஆகியோரை சந்தித்து பெரியசாமி பாண்டியனை கொலை செய்ய வேண்டும் என்றும், அதற்காக ரூ.3 லட்சம் தருவதாகவும் கூறினார்கள்.

வெட்டிக்கொலை


இதனையடுத்து மாடசாமி, திருமலை உள்பட 7 பேரும் சேர்ந்து பெரியசாமி பாண்டியனை கொலை செய்வதற்காக கடந்த 17.12.2007 அன்று காலையில் சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பதுங்கி இருந்தனர். அப்போது அந்த வழியாக நடைபயிற்சி சென்ற பெரியசாமிபாண்டியனை 7 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி சாமி என்ற ஆறுமுகசாமி, ரமேஷ், மயில்ராஜ், ஆனந்தராஜா என்ற ஆனந்த், மாடசாமி, கரையடிமாடசாமி, திருமலை ஆகிய 7 பேரையும் கைது செய்து அவர்கள் மீது நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கைதான 7 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணையில் இருந்தபோது 7 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை


நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியில் வந்த கரையடிமாடசாமி, திருமலை ஆகிய 2 பேரும் மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கரையடிமாடசாமி, திருமலை ஆகிய இருவரும் மதுரையில் தங்கி இருந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர்.

கடந்த 6.4.2008 அன்று கரையடிமாடசாமி, திருமலை ஆகிய இருவரும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது பெரியசாமி பாண்டியனின் ஆதரவாளர்களால் மதுரையில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

தலைதுண்டித்து கொலை


சாமி என்ற ஆறுமுகசாமி கடந்த 8.3.2016 அன்று திருச்செந்தூர் அருகே பழையகாயல் பகுதியில் நின்றபோது பசுபதிபாண்டியனின் ஆதரவாளர்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.

பெரியசாமிபாண்டியன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் கரையடிமாடசாமி, திருமலை, சாமி என்ற ஆறுமுகசாமி ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டு விட்டதால் ரமேஷ், மயில்ராஜ், ஆனந்தராஜா என்ற ஆனந்த், மாடசாமி ஆகிய 4 பேர் மீதான வழக்கு மட்டும் நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 32 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். இதில் 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

2 பேருக்கு ஆயுள் தண்டனை


வழக்கை நீதிபதி முத்துகிருஷ்ணன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ், மயில்ராஜ் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்தார். ஆனந்தராஜா என்ற ஆனந்த், மாடசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜரானார்.

மேலும் செய்திகள்