கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகள் 2–வது நாளாக கடையடைப்பு த.மா.கா.வினர் நூதன போராட்டம்

கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகள் 2–வது நாளாக கடையடைப்பு த.மா.கா.வினர் நூதன போராட்டம்

Update: 2016-12-21 23:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில், பொது ஏலத்தை ரத்து செய்யக்கோரி தினசரி மார்க்கெட்டில் நேற்று 2–வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரசபை நிர்வாகத்துக்கும், வியாபாரிகளுக்கும் இடையே சுமுக தீர்வு ஏற்பட வேண்டி, த.மா.கா.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2–வது நாளாக  கடையடைப்பு

கோவில்பட்டி நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் சுமார் 400 கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு பல மடங்கு வாடகை கட்டணத்தை நகரசபை நிர்வாகம் உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் உள்ள 161 கடைகளுக்கு வருகிற 28–ந்தேதி (புதன்கிழமை) பொது ஏலம் நடைபெறுவதாக நகரசபை நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று முன்தினம் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2–வது நாளாகவும் தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகள் கடைகளை திறக்கவில்ல். இதனால் மார்க்கெட் வளாகம் வெறிச்சோடியது.

த.மா.கா. போராட்டம்

இதற்கிடையே கோவில்பட்டி நகரசபை நிர்வாகத்துக்கும், மார்க்கெட் வியாபாரிகளுக்கும் சுமுக தீர்வு ஏற்பட வேண்டி, த.மா.கா.வினர் நேற்று காலையில் கோவில்பட்டி மார்க்கெட் ரோடு முருகன் கோவிலில் 108 தேங்காய் விடலை போட்டு, முருகபெருமானிடம் கோரிக்கை மனு வழங்கி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர தலைவர் ராஜகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், மேற்கு வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, நகர துணை தலைவர் காளி பாண்டியன், மாவட்ட துணை தலைவர் ரசாக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், பொன் பாண்டியன், சுப்புராஜ், செண்பகராஜ் ஜோசுவா, மூர்த்தி, வைரம், மாரிமுத்து ராமலிங்கம், சரவணன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்