ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். ஓய்வூதியர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்

Update: 2016-12-21 21:30 GMT

திருவண்ணாமலை,

ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார்.

ஓய்வூதியர்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். ஓய்வூதிய நலத்துறை இணை இயக்குனர்கள் ராமச்சந்திரன், சிவக்குமார், துணை இயக்குனர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணிக்கொடை, சேமநலநிதி, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் தொடர்பாக 75 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதன்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கூட்டத்தில் 12 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4½ லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கி பேசியதாவது:–

கோரிக்கை மனுக்கள்

ஓய்வூதியர்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்கள் நிலுவையில் உள்ள பணிக்கொடை, ஓய்வூதியம் தொடர்பாக மனுக்கள் அனுப்பினால், அதற்குரிய பதிலை உடனுக்குடன் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் ஓய்வூதியர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், மனுக்கள் மீது குறைபாடுகள் இருப்பின், அதனை கூறி உரிய தீர்வுகளை தெரிவிக்க வேண்டும்.

வயது முதிர்ந்து உடல் நலம் பாதிப்படைந்த பல ஓய்வூதியர்களால் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனுக்களை அளிக்க இயலாது. எனவே ஓய்வூதியர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலனை உரிய காலத்தில் பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஜோசப், மாவட்ட கருவூல அலுவலர் மரகதமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்