பள்ளிகொண்டா அருகே 2 மகள்களுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

பள்ளிகொண்டா அருகே 2 மகள்களுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

Update: 2016-12-20 23:00 GMT
அணைக்கட்டு,

பள்ளிகொண்டா அருகே 2 மகள்களுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

 தனியார் நிறுவன ஊழியர்


பள்ளிகொண்டாவை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜீவக்குமார் (வயது 29). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது தாய் குப்பம்மாள் காட்பாடியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

ஜீவக்குமாருக்கும் காஞ்சீபுரம் புரசை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் திவ்யா (26) என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவஸ்ரீ (6), கவினா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

ஜீவக்குமார் தன் மனைவி, குழந்தைகளை ராமாபுரத்தில் உள்ள தன் தாய் குப்பம்மாள் வீட்டில் விட்டுவிட்டு சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தாய் மற்றும் மனைவி குழந்தைகளை பார்க்க வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

2 மகள்களுடன் மாயம்


இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி காலை குப்பம்மாள் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். திவ்யா தன் மகள் தேவஸ்ரீயை பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மாலை 3–30 மணிக்கு அழைத்து வந்துள்ளார். மாலை 6 மணிக்கு குப்பம்மாள் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மருமகள் மற்றும் பேரக் குழந்தைகள் இல்லாததை பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

அதிர்ச்சியடைந்த குப்பம்மாள் சென்னையில் உள்ள தன் மகன் ஜீவக்குமாரிடம் போனில் உன் மனைவி வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என்று உனக்கு போன் செய்தாரா? என்று கேட்டார். அதற்கு ஜீவக்குமார் எனக்கு போன் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

உடனே தன் மாமனார் செல்வத்திற்கு போன் செய்து திவ்யா அங்கு வந்துள்ளாரா என்று ஜீவக்குமார் கேட்டுள்ளார். இதையடுத்து ஜீவக்குமாரும், செல்வமும் ராமாபுரம் வந்து பல இடங்களில் தேடி வந்தனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை


இந்த நிலையில் நேற்று காலை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் தோப்பில் உள்ள கிணற்றின் அருகே ஒரு கைப்பை, குழந்தை பள்ளிக்கு எடுத்து சென்ற தண்ணீர் பாட்டில், குழந்தை அணிந்திருந்த செருப்பு ஆகியவைகள் கிணற்றின் கரையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஜீவக்குமார் மற்றும் உறவினர்கள் ஊர் பொதுமக்களை அழைத்து கிணற்றில் உடலை தேடினர்.

அப்போது திவ்யாவின் உடலை மேலே எடுத்தபோது 2 குழந்தைகளையும் தன் உடலில் துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உதவி கலெக்டர் விசாரணை


இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்த மீட்ட உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திவ்யாவின் தந்தை செல்வம் பள்ளிகொண்டா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால் வேலூர் உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்