வழக்கறிஞரின் கேள்வியால் அடக்க முடியாமல் சிரித்த நடிகர் ஜானி டெப்
நடிகர் ஜானி டெப்பின் மர்ம உறுப்பை பார்த்தீரா? என்ற வழக்கறிஞரின் கேள்வியை கேட்டவுடன் ஜானி அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.
வாஷிங்டன்,
பைரட்ஸ் ஆப் தி கரிபியன் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜானி டெப் (வயது 58). ஆன்னிசன் என்பவரை 1983ம் ஆண்டு கரம் பிடித்த இவர்களது திருமணம் 2 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
அதன்பின்பு தன்னை விட 22 வயது குறைவான அமெரிக்க நடிகை ஆம்பர் ஹியர்ட் (வயது 36) என்பவருடன் 2011ம் ஆண்டில் காதல் வசப்பட்டார். இவர்களது திருமணம் 2015ல் நடந்தது.
ஆனால், இந்த திருமணமும் 2 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. ஜானி தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என ஆம்பர் குற்றச்சாட்டு கூறினார். ஆனால் இதனை ஜானி மறுத்துள்ளார்.
இதன்பின்னர், 2018ம் ஆண்டில் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஒரு கட்டுரை எழுதினார். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்த கட்டுரையில், குடும்ப வன்முறையில் இருந்து எப்படி தப்பி வெளியே வந்தேன் என்று வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அதில், ஜானியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
எனினும், ஆம்பருக்கு எதிராக ஜானி டெப், கோர்ட்டில் அவதூறு வழக்கு போட்டார். நடிகை ஆம்பர், ஒருநாள் தன்னை அடித்து துன்புறுத்தினார் என்றும், தனது விரலை ஒயின் பாட்டிலை வீசி துண்டித்துள்ளார் என்றும், இதற்கு இழப்பீடாக பல கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, தனது உறுப்பில் மதுபான பாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக கடுமையான துன்புறுத்தலில் ஜானி டெப் ஈடுபட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை ஆம்பர் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். அதன் காரணமாக தனது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதனால், வழக்கு விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை ஆம்பருக்கு எதிரான அவதூறு வழக்கு ஏப்ரல் 11ந்தேதியில் இருந்து வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வரும் நிலையில், நடிகை ஆம்பரின் வழக்கறிஞர் கேட்ட கேள்வி ஒன்று ஜானி டெப்புக்கு அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பை வரவழைத்து உள்ளது.
2015ம் ஆண்டில் பைரட்ஸ் ஆப் தி கரீபியன்: டெட் மென் டெல் நோ டேல்ஸ் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, ஆஸ்திரேலியாவில் வாடகை வீட்டில் ஜானி டெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் தங்கி இருந்துள்ளனர்.
இதில், அவர்கள் ஒன்றாக இருந்தபோது, வீட்டின் நுழைவு பகுதியில் ஜானி டெப் சிறுநீர் கழித்து விட்டார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இதுபற்றி ஜானியின் பாதுகாவலரிடம், ஆம்பரின் வழக்கறிஞர் சில கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டார். ஜூம் செயலி வழியே நடந்த இந்த விசாரணையில், ஜானி சிறுநீர் கழித்தது உண்மையா, இல்லையா? என வழக்கறிஞர் கேட்டுள்ளார்.
அதற்கு பாதுகாவலர் மால்கம் கன்னோலி, வீட்டிற்குள் சத்தம் கேட்டது. அதனால் என்னவென்று பார்க்க உள்ளே போனேன். ஜானி நுழைவு பகுதியில் தென்பட்டார் என பதிலளித்து உள்ளார்.
இதற்கு வழக்கறிஞர், ஜானி சிறுநீர் கழிக்க முயன்று கொண்டு இருந்துள்ளார்? இல்லையா? என கேட்டார். அதற்கு கன்னோலி, இல்லை என்றார்.
ஆனாலும் விடாத வழக்கறிஞர், நடிகர் ஜானி சிறுநீர் கழிக்க உறுப்பினை வெளியே எடுத்துள்ளார். இல்லையா? என கேட்டுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த கன்னோலி, நான் ஜானியின் உறுப்பை பார்த்தேனா என்பது பற்றி ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று பதிலளித்து உள்ளார்.
அந்த விசாரணையை பார்த்து கொண்டிருந்த நடிகர் ஜானி அடக்க முடியாமல் சிரிப்பை வெளிப்படுத்தி விட்டார். தனது கைகளுக்குள் முகம் புதைத்து, தலையை ஆட்டியபடியே சிரித்து உள்ளார். ஒரு வழக்கில் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள வழக்கறிஞர்கள் இதுபோன்று குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டு, பதில்களை பெறுகிறார்கள் என்பது இந்த நடைமுறையில் இருந்து தெரிய வருகிறது.