"ஜனங்களின் கலைஞன்" - சின்னக்கலைவாணரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று
மக்களின் காதலன்...மரங்களின் காவலன்...மறைந்தும் என்றென்றும் எல்லோர் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்த சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று...
சென்னை,
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவைக்குத் தேவை சிரிப்பு மட்டுமல்ல, சிந்தனையும் தான் என தனது ஒவ்வொரு வசனத்திலும் மக்கள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைத்த மாபெரும் கலைஞன் விவேக்...
நகைச்சுவையால் மக்களை மகிழ்விப்பதோடு மட்டும் நின்று விடாமல், மூட நம்பிக்கைகளை முற்போக்கு சாட்டையால் அடித்தவர் விவேக்...
யாரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் அரசியல் ஊழல்கள் குறித்து திரைப்படங்களில் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய வெகு சில கலைஞர்களில் "ஜனங்களின் கலைஞன்" விவேக்கும் ஒருவர்...
90களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி...கடின உழைப்பு எனும் ஏணியால் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகி வெற்றிக் கனியைப் பறித்தவர் விவேக்...
சுமார் 220 திரைப்படங்களில் நடித்த விவேக் ஏராளமான விருதுகள் பெற்று அசத்தியுள்ளார்...மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக அவருக்கு 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது...
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் கொண்ட விவேக்..."தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நட வேண்டும்" என்ற முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கனவை நெஞ்சில் ஏந்தி தன் வாழ்நாளில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளையாக மாறினார்
மண்ணை விட்டு மறைந்தாலும், நகைச்சுவை கலைஞனாக மக்கள் மனதிலும்...வனங்களின் காதலனாக மரங்களின் நிழல்களிலும் விவேக்கின் ஆன்மா இன்றும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது...