பள்ளியை கட்டடித்து 'பீஸ்ட்' படத்திற்கு படையெடுத்த மாணவர்கள்...!
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
சென்னை
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை காண்பதற்காக பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் அதே சீருடையுடன் தியேட்டருக்கு சென்றுள்ளனர். சிலர் மாணவர்கள் புத்தகப்பையுடனும், சிலர் புத்தகப்பை இல்லாமலும் தியேட்டருக்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படத்தை பார்த்து விட்டு சென்றுள்ளனர்.