தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு...!
சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய ராஜேஷ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா, சதிஷ், ரோபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில், ரூ 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு அளித்த ரூ.11 கோடி சம்பளத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் அதனை வரிமானவரித்துறையிடம் ஞானவேல் ராஜா செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனக்கு மீதமுள்ள சம்பள பாக்கியை அளிக்கும்வரை ஞானவேல் ராஜா விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்குமாறும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.