தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் - திடீர் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-03-20 05:02 GMT
Image Courtesy: DT Next
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு தனிநீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவில் வாக்கு எண்ணிக்கையை நடத்த தடையில்லை என உத்தரவிடப்பட்டது.

ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ஏழுமலை என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. துணைத்தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்திற்கு முன் தொடங்கியது.

அதில், விஷால் அணியில் போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.   

இந்த நிலையில் ஐசரி கணேஷ் தரப்பினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியுள்ளனர். தேர்தல் நாளன்று கூறிய பதிவான வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் 5 வாக்குச்சீட்டுகள் அதிமகாக இருப்பதாக ஐசரி கணேஷ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஐசரி கணேஷ் தரப்பினர் புகார் அளித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணும் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்