மோசடி வழக்கு: ரஜினி பட நடிகைக்கு பிடி வாரண்ட்..!
தமிழில் லிங்கா படத்தில் நடித்த சோனாக்சி சின்ஹா மீது தொடுத்த மோசடி வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாக்சி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைத்து இருந்தனர். இதற்காக அவருக்கு 4 தவணைகளாக ரூ.37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல சோனாக்சி சின்ஹா மறுத்துவிட்டார். பின்னர் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதையடுத்து சோனாக்சி சின்ஹா மீது உத்திரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சோனாக்சி சின்ஹா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உத்திரபிரதேச மொரதாபாத் கோர்ட்டு சோனாக்சி சின்ஹாவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.