தமிழில் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை இயக்குவேன் - பாகுபலி டைரக்டர்
தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன் என பாகுபலி டைரக்டர் ராஜமவுலி கூறினார்.
சென்னை,
டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். பாலிவுட் நடிகர் அஜெய் தேவ்கான், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் நடந்த வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களை சந்தித்த டைரக்டர் ராஜமவுலி கூறியதாவது:-
நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதனால் அரசியல் பேச வேண்டாம், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தைக் குறித்து மட்டும் பேசுவோம்.
சென்னைக்கு வரும்போது பள்ளி மாணவனாக உணருகிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளி. அனைத்தையும் கற்றுக் கொடுத்தது. ஏன் ஹாலிவுட் நடிகர்களை படமெடுக்க வேண்டும்? நம் நடிகர்களே மிகவும் திறமையானவர்கள்தான். நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம்.
தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன்.
பாகுபலியைப் போன்றே ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராம்சரண் மீண்டும், தான் பிறந்த இடமான சென்னைக்கு வருவது தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களை நினைவு படுத்துவதாக கூறினார்.
தமிழ் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோர் தெலுங்கு படங்களில் நடித்தால் முதல் ஆளாய் வரவேற்பேன் என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்தார்.