இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏன்? தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் விளக்கம்
உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவுவதால், இந்திய பொருளாதாரத்திலும் மந்த நிலை நிலவுவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருக்கும் எனவும் அடுத்த நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு தயார் செய்த இந்த பொருளாதார ஆய்வறிக்கை, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் பொருளாதார ஆய்வறிக்கை பற்றி கூறியதாவது ; - “உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவுவதால், இந்திய பொருளாதாரத்திலும் மந்த நிலை நிலவுகிறது. செல்வத்தை உருவாக்குவோம்'என்ற கருத்தை மையமாக கொண்டு, இந்த ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .
2008- 12 ஆம் ஆண்டுகளில் அதிக அளவு கடன் பெற்ற நிறுவனங்கள் 2013-17 ஆம் ஆண்டு கால கட்டங்களில் குறைந்த அளவே முதலீடு செய்துள்ளன. 2013- ஆம் ஆண்டில் இருந்தே முதலீடுகள் குறைந்ததால், பொருளாதார மந்த நிலை 2017 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்டது.
வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் இல்லாமல் இருந்தால் மற்ற சமூக துறைகளுக்கு இருமடங்கு தொகை செலவிட்டிருக்க முடியும்" என்றார்.