மூன்றாவது நாளாக தொடர் ஏற்றம் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு நிப்டி 6 புள்ளிகள் முன்னேற்றம்

புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6 புள்ளிகள் முன்னேறியது.

Update: 2019-07-04 07:27 GMT
மும்பை

நேற்றும் பங்கு வர்த்தகம் கடும் ஏற்ற, தாழ்வுகளை சந்தித்தது. நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் முதலீட்டாளர்கள் காத்திருந்து செயல்படும் அணுகுமுறையைக் கையாண்டனர். உலக பங்கு வர்த்தக நிலவரங்களும் திருப்திகரமாக இல்லை. எனினும் உள்நாட்டு சந்தைகள் சரிவைச் சந்திக்கவில்லை.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் லேசான ஏற்றம் கண்டன. அதில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 0.76 சதவீதம் உயர்ந்தது. அதே சமயம் ஐ.டி. துறை குறியீட்டு எண் 0.86 சதவீதம் குறைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் இண்டஸ் இந்த் வங்கி, ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, பவர் கிரிட், ஏஷியன் பெயிண்ட், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் டெக் மகிந்திரா, வேதாந்தா, இன்போசிஸ், யெஸ் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 22.77 புள்ளிகள் அதிகரித்து 39,839.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,934.99 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 39,732.38 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,314 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,165 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 172 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.1,770 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.1,638 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 6.45 புள்ளிகள் உயர்ந்து 11,916.75 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,945.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,887.05 புள்ளிகளுக்கும் சென்றது.

மேலும் செய்திகள்