மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்ப்பு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிஉள்ளார். #Budget2018 #OPanneerselvam
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்குக் கிடைத்துள்ள கடைசி நிதியாண்டு இதுவாகும்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீது அனைத்து துறையினர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து பல துறையினர் தரப்பிலும் கருத்து வெளியிடப்பட்டும் வருகிறது.
இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, விவசாயம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால் ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் அடைந்த பாதிப்புகளுக்கு ஈடாக பெரிய நிவாரணம் எதையும் எதிர்பார்க்க முடியாது எனவும் கூறப்படுகிறது. மாநில அரசுக்கள் தரப்பிலும் மத்திய பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தேர்தல்களையும் எதிர்நோக்கி உள்ளதால் சலுகை அறிவிப்புகள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளார்.