பைக்கில் பயணித்து பால் விற்கும் கிராமத்துப் பெண்!
இரண்டு பெரிய கேன்களில் பாலை எடுத்துக்கொண்டு பைக்கில் பயணிப்பதே சவாலான விஷயம்தான். குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பாலைக் கொண்டுபோய்க் கொடுப்பதில் மனநிறைவு அடைகிறேன்.
“நம்மால் முடியும் என்று நம்பி முயற்சி செய்தால், எந்த வேலையாக இருந்தாலும் செய்து முடிக்கலாம். தன்னம்பிக்கை, தைரியத்தோடு, தொடர் முயற்சியும், கடும் உழைப்பும் இருந்தால் பெண்கள் எதையும் சாதிக்கலாம்” என்கிறார் ஈரோடு மாவட்டம் வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த பூவிழி. ஏழாம் வகுப்பு மட்டுமே படித்த இவர், ஆண்கள் ஓட்டும் கியர் பைக்கில், இரண்டு பெரிய பால் கேன்களை வைத்து கட்டிக்கொண்டு, தினமும் காலையும் மாலையும் பல மணி நேரம் பால் விற்பனை செய்கிறார்.
தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை இடைவிடாது உழைத்து குடும்பத்தை முன்னேற்றி வருகிறார். அவர் தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்…
“நான் பிறந்தது கரூரில். திருமணத்துக்கு பின்பு ஈரோடு மாவட்டம் வெள்ளியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன். கணவர் மாரிமுத்து விவசாயக் கூலி வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள்.
குடும்ப சூழ்நிலையின் காரணமாக பால் விற்பனை செய்யும் தொழிலை செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சிலரிடம் கூலி வேலையாகத்தான் இதைச் செய்தேன். பின்பு சிறிது சிறிதாக முயன்று மாடுகள் வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். அதன் மூலம் நானே சொந்தமாக பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன்.
மிதிவண்டி மட்டுமே ஓட்டத்தெரிந்த எனக்கு, எனது கணவர் மோட்டார் பைக் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்தார். தற்போது கியர் பைக் மட்டுமின்றி காரும் நன்றாக ஓட்டுவேன். இரண்டுக்கும் ஓட்டுநர் உரிமமும் வாங்கி வைத்திருக்கிறேன்.
ஒரு நாளுக்கு எத்தனை கிலோமீட்டர் பைக்கில் பயணிக்கிறீர்கள்?
எங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு 40 கிலோமீட்டருக்குமேல் பயணித்து, ஈரோடு கருங்கல்பாளையம் வரை செல்கிறேன். பிறகு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று பால் விற்பனை செய்வேன். இவ்வாறு இரண்டு வேளைக்கும் சேர்த்து நாளொன்றுக்கு 240 கிலோ மீட்டர் தொலைவு பைக்கில் பயணிக்கிறேன்.
இந்தத் தொழிலில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
இரண்டு பெரிய கேன்களில் பாலை எடுத்துக்கொண்டு பைக்கில் பயணிப்பதே சவாலான விஷயம்தான். வெயில், மழை, குளிர் என எந்தக் காலச் சூழ்நிலையிலும் பால் விற்பனையில் விடுமுறை எடுக்க முடியாது. குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பாலைக் கொண்டுபோய்க் கொடுப்பதில் மனநிறைவு அடைகிறேன்.
இதற்கிடையில் பசுக்களை பராமரிப்பது, அவற்றுக்கு தீவனம் கொண்டு வருவது, குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பது என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறேன்.
உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
எனது தொழிலை பெரிய அளவில் உருவாக்கி குடும்பத்துக்கும், நான் வாழும் ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.