கோடை காலத்தில் தோட்டத்தை அழகாக்கும் மலர்ச் செடிகள்!

அழகான நிறங்கள் கொண்ட இலைகளையும், கிரீம் கலர் பூக்களையும் கொண்டவை கார்டீனியா பூச்செடிகள். கோடை காலத்தில் மாலை நேரத்தில் இவை பூத்துக் குலுங்கும். வீட்டுத் தோட்டத்தில் இந்த மலர்த் தாவரங்களைப் பயிரிட்டு வளர்க்கலாம். தோட்டம் அழகாய் மாறும்.

Update: 2022-04-11 05:30 GMT
வீட்டில் தோட்டம் அமைப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. அதிலும் கோடை காலத்தில் வீட்டில் இருக்கும் பசுமையைப் பார்க்கும் பொழுது, மனதில் அலாதியான இன்பம் தோன்றும். அவற்றுக்கு மலர்ச் செடிகள் முக்கிய பங்கு வகிக்கும்.

மலர்ச் செடிகள் கோடை காலத்திலும், வீட்டுத் தோட்டத்தை அழகாய் காட்டுவதற்கு உதவுகிறது. குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு வளரக்கூடிய மலர்ச் செடிகளும் ஏராளமாக இருக்கின்றன. 

கோடை காலத்தில் என்னென்ன மலர்ச் செடிகளை வளர்க்கலாம்?
எளிதில் கிடைக்கக்கூடிய செம்பருத்திப்பூ, வெட்சிப் பூ, செவ்வரளி, மல்லிகைப்பூ, நித்திய கல்யாணி, சங்குப்பூ, ரங்கூன் கிரேப்பர் போன்ற மலர்ச் செடிகள் சிவப்பு, மஞ்சள்,  நீலம், பிங்க் போன்ற வண்ணங்களில் தினமும் பூத்துக் குலுங்கும். இவை பார்ப்பதற்கு அழகாகவும், வண்ணமயமாகவும் இருக்கும்.

ஹைட்ரேஞ்சர் மலர், ஜின்னா மலர், அலமண்டா, மானோ லாவண்டர், பேன்டாஸ், மார்னிங் குளோரி போன்ற தாவரங்கள் பல வண்ணங்களில் பூப்பவை.

அழகான நிறங்கள் கொண்ட இலைகளையும், கிரீம் கலர் பூக்களையும் கொண்டவை கார்டீனியா பூச்செடிகள். கோடை காலத்தில் மாலை நேரத்தில் இவை பூத்துக் குலுங்கும். வீட்டுத் தோட்டத்தில் இந்த மலர்த் தாவரங்களைப் பயிரிட்டு வளர்க்கலாம். தோட்டம் அழகாய் மாறும்.

கோடை காலத்தில் அழகூட்டும் வாடாமல்லி, ஹாலிஹாக், டேபிள் ரோஸ், கோழிக் கொண்டை போன்றவற்றையும் வளர்க்கலாம். கிளாடியஸ் மலர்கள் நட்சத்திர வடிவத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கோடை காலத்தில் பூக்கும் இந்தப் பூக்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் எனப் பல நிறங்களில் காணப்படும். வீட்டுத் தோட்டத்தில் இவற்றைப் பயிரிட்டு வளர்த்தால் கோடையின் வெப்பம் நம்மைத் தாக்காது.

பால்சம் பூக்கள் பாதை ஓரங்களில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்றன. இவை வருடாந்திர மலர்ச் செடிகள். இந்தத் தாவரத்தின் மலர்கள் வெள்ளை, பிங்க், ரோஸ், சிவப்பு நிறங்களில் சிறியதாகப் பூத்திருக்கும். இவை கோடை காலத்தின் மத்தியில் பூக்கும் என்பதால் வசந்த காலத் தொடக்கத்தில் இவற்றைப் பயிரிடலாம். 

மேலும் செய்திகள்