இனிமையான குரல் வளத்துக்கு...
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதுபோல, அன்றாட வாழ்வில் சில விஷயங்களை பழக்கப்படுத்துவதன் மூலம் குரல் வளத்தையும் இனிமையானதாக பராமரிக்கலாம்.
நம்மை பிறரிடம் அடையாளப்படுத்துவதில் முக்கிய இடம் பிடிப்பது ‘குரல்’. இது நமது ஆளுமை மற்றும் உணர்ச்சிகளை சித்தரிக்கிறது. அழகான குரல் அனைவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது. குரலின் அடிப்படையில் பிறர் நம்மைப் பற்றி மதிப்பீடு செய்கிறார்கள். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதுபோல, அன்றாட வாழ்வில் சில விஷயங்களை பழக்கப்படுத்துவதன் மூலம் குரல் வளத்தையும் இனிமையானதாக பராமரிக்கலாம். அதற்கான சில வழிகள் இங்கே...
நமது குரல் நாண்கள் மிகவும் மென்மையானவை. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லையென்றால், நாம் பேசும்போது அவை வேகமாக அதிர்வடையும். எனவே தேவையான தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். நீர்ச்சத்து கொண்ட ஆப்பிள், பேரிக்காய், தர்பூசணி, பீச், முலாம்பழம், திராட்சை, பிளம்ஸ், குடைமிளகாய், வெள்ளரி போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
சத்தமாக பேசுவது, தொண்டை வறண்டு போகும் அளவுக்கு பேசுவது போன்றவற்றை தவிர்ப்பது குரல் வளத்தைப் பாதுகாக்கும். சப்தமில்லாமல் மென்மையாக பேசுவதன் மூலம் குரலைப் பாதுகாக்கலாம். கழுத்து தசைகளுக்கு, மென்மையான பயிற்சி செய்வது தொண்டைப் பகுதிக்கு நல்லது.
சளி, தொண்டையில் கிருமித் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது குரலில் மாறுபாடுகள் இருக்கும். அத்தகைய நேரங்களில் அதிக நேரம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் குரல் நாண்கள் பாதிப்படைவதைத் தடுக்கலாம். மூச்சுப் பயிற்சிகள் செய்வது குரல் வளத்தைப் பராமரிக்க உதவும்.