உங்கள் தோட்டத்துக்கு பறவைகளை வரவழைப்பது எப்படி?
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகை பறவைகளுக்கு அரிசி மற்றும் நாம் உண்ணும் உணவுகளை வைக்காமல் அவற்றிற்கு உண்ண ஏதுவான சிறுதானியங்களை வைக்க வேண்டும்.
பறவைகளுக்கும் மனிதனை போன்று உணவு, இருப்பிடம், நீர் ஆகியவை அவசியமான தேவைகளாக விளங்குகின்றன. பறவைகளின் மீது காதல் கொண்டவர்கள் உணவு, இருப்பிடம், நீர் ஆகியவற்றை தங்கள் வீட்டுத் தோட்டங்களிலும், பால்கனியிலும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பறவைகளை தங்கள் வீட்டை நோக்கி ஈர்க்க முடியும்.
பறவைகளின் நிறம், மென்மை, சத்தம் போன்றவை மனிதனை உற்சாகப்படுத்தும். வீட்டுத் தோட்டத்தில் கூடு போன்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் பறவைகளுக்குப் பிடித்தமான இடமாக நமது தோட்டத்தை மாற்றலாம். கூடு போன்ற அமைப்பு பறவைகளுக்கு அதிக நம்பிக்கையை கொடுப்பதால், இதன் மூலம் அதிக அளவிலான பறவைகளைத் தோட்டத்தை நோக்கி ஈர்க்க முடியும்.
சிட்டுக் குருவிகளுக்கு விருப்பமான மற்றும் அவை உண்பதற்கு ஏதுவான திணை, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை வீட்டின் மேல் தளம் அல்லது தோட்டத்தில் வைப்பதால் அவற்றை எளிதாக ஈர்க்க முடியும்.
சிறிய தொட்டியில் தூய்மையான தண்ணீர் வைத்தால், பறவைகள் தொடர்ந்து நீர் தேவைக்காக வீட்டைத் தேடி வரும். அவ்வாறு வைக்கப்படும் நீரில் சர்க்கரை கலந்து வைப்பது பறவைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
தாகத்திற்காக மட்டுமில்லாமல் பறவைகள் குளிப்பற்கும் ஏதுவான வகையில் தொட்டி அமைத்தால், வீட்டுத் தோட்டம் பறவைகளுக்கு மகிழ்ச்சியான இடமாக அமையும்.
தண்ணீர் வைக்கப்பட்டுள்ள தொட்டி மற்றும் அதன் சுற்றுப்புறம் தூய்மையானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் பாத்திரங்கள் மண் பாண்டங்களாக இருப்பது சிறந்தது. ஏனெனில் பிளாஸ்டிக் பாத்திரங்களின் நிறம் பறவைகளை அச்சமூட்டக்கூடும்.
பறவைகள் மகரந்தம், தேன், விதைகள் ஆகியவற்றை விரும்பும். எனவே பழச்செடிகள் மற்றும் காய்கறி செடி வகைகள், பூச்செடிகள் ஆகியவை தோட்டத்தில் இருந்தால் அவற்றால் பறவைகள் அதிகமாக கவரப்படும். பழச்செடிகள் இல்லையெனில், வெளியில் வாங்கிய பழங்களை பறவைகள் உண்ணுவதற்கு ஏதுவாக வெட்டி வைக்கலாம்.
பறவைகளின் இனங்கண்டு அவற்றிற்கு உண்ண ஏதுவான உணவை வைப்பது சிறந்தது. சிட்டுக்குருவி போன்ற சிறிய வகை பறவைகளுக்கு அரிசி மற்றும் நாம் உண்ணும் உணவுகளை வைக்காமல் அவற்றிற்கு உண்ண ஏதுவான சிறுதானியங்களை வைக்க வேண்டும்.
செம்பருத்தி, ஊமத்தம்பூ போன்ற குழாய்வடிவ மற்றும் கொத்து வடிவ அமைப்புடைய பூக்கள் பெரிய வகை பறவைகளை அதிகமாக ஈர்க்கும். ‘சன் பேர்ட்ஸ்’ எனும் ‘பருதிப் புள்’ பறவை இனங்கள், லில்லி பூக்கள் போன்ற கொத்து வடிவ பூக்களால் அதிகமாகக் கவரப்படுகின்றன.
இதுபோன்று ஒவ்வொரு பறவைகளின் தேவையறிந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும்போது உங்கள் தோட்டத்தை பறவைகளின் சரணாலயமாக மாற்ற முடியும்.