இறகுகளைக் கொண்டு அணிகலன்கள் செய்யும் கலை
இருபதாம் நூற்றாண்டில் பறவைகளின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடை மற்றும் அணிகலன்கள் பெண்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தன.
ஆதிகாலத்தில் இருந்தே பெண்கள் தங்களை இன்னும் அழகாக காட்சிப்படுத்துவதற்காக, ஆடை மற்றும் அணிகலன்களைப் பல பொருட்களின் மூலம் அலங்கரிக்கிறார்கள். அதில் முக்கியமானது பறவைகளின் இறகுகள். தற்போதும் சிறகுகளால் ஆன காதணிகள், கழுத்தணிகள், ஆடைகள் போன்றவை இளம் பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.
பூர்வீக அமெரிக்கர்கள் தலைக்கவசங்களின் அலங்காரங்களுக்கு இறகுகளைப் பயன்படுத்தியதாக பதிவுகள் உள்ளன. அவை கழுகின் வால் இறகுகளால் செய்யப்பட்டது. இந்தத் தலைக்கவசம் மரியாதை, சாதனை மற்றும் துணிச்சலின் அடையாளமாகக் கருதப்பட்டது. மேலும், இவ்வகை போர் தலைக்கவசங்கள் க்ஃபீட், செயென், ப்ளைன்ஸ் க்ரீ மற்றும் சியோக்ஸ் போன்ற இந்திய பழங்குடியினரால் அணியப்பட்டவை என்று கூறப்படுகிறது. பண்டைய எகிப்திலும் நெருப்புக்கோழியின் இறகால் அலங்கரிக்கப்பட்ட ஆடை மற்றும் அணிகலன்களை சத்தியத்தின் அடையாளமாக கருதினர்.
இருபதாம் நூற்றாண்டில் பறவைகளின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடை மற்றும் அணிகலன்கள் பெண்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தன.
பறவைகளின் இறகுகள்:
பறவைகளைக் கொல்லாமல் இயற்கையாக உதிரும் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடை மற்றும் அணிகலன்களை மட்டுமே பெரும்பாலான மக்கள் விரும்பினர். வாத்து, கினி கோழி, மக்கா, ஃபெசண்ட், வான்கோழி, மயில், நெருப்புக்கோழி மற்றும் சேவல் போன்ற பறவைகளின் இறகுகள் பல வண்ணங்கள் மற்றும் நிறங்களில் கிடைக்கின்றன. இவை மிகவும் வசீகரமாக அணிகலன்களில், ஆடைகளில் அலங்கரிக்கப்பட்டு பெண்களை பரவசப்படுத்தின.
இறகுகளின் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்துவதற்காக அவை தூசி, ஒளி மற்றும் பூச்சிகள் இல்லாத அமில கார நடுநிலை பெட்டிகளில் சேமிக்கப்படுகின்றன. சேமிப்பிற்கான உகந்த வெப்பநிலை 60 டிகிரி முதல் 75 டிகிரி பாரன்ஹீட், ஈரப்பதம் 45 முதல் 55 சதவீதம் வரை இருக்குமாறு கவனத்துடன் வைக்கப்படுகின்றன.
இறகுகளின் வகைகள்:
பறவைகளின் இறகுகள் விளிம்பு இறகுகள், கீழ் இறகுகள் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. விளிம்பு இறகுகள், இறக்கை மற்றும் வால் பகுதியில் காணப்படும். கீழ் இறகுகள், விளிம்பு இறகுகளின் அடிப்பாகத்தில் காணப்படும். இவை இரண்டும் ஆடைகளை அலங்கரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.
பறவைகளின் இறகுகளை சேகரித்து அவற்றை ஒரே நேர்கோட்டில் வைத்து தைக்கப்படும் அமைப்பை ‘ட்ரீம்’ என்று கூறுவார்கள். இவை பெரும்பாலும் ஆடைகளின் மேல் அல்லது கீழ் பகுதியை வடிவமைப்பதற்கு சேர்க்கப்படும் ஒன்றாகும். நேர்த்தியான மற்றும் அற்புதமான ஆடைகளை இவற்றால் உருவாக்கலாம். அதுமட்டுமல்லாமல் அணிகலன்கள் மற்றும் பெண்களின் கைப்பைகளில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அழகான கலை
பேஷன் உலகில் இறகுகளுக்கு தனி இடம் உண்டு. இவை பெண்களுக்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்படும் ஆடைகள், நகைகள், கைப்பைகள், தலைக்கவசங்கள், முகமூடிகள் மற்றும் அணிகலன்களில் இடம் பெறுகின்றன. பெண்களுக்குத் தயாரிக்கப்படும் உடைகளில் இறகுகள் மிகுதியாக சேர்க்கப்படுவதால் இவை அழகிற்கு அழகு சேர்க்கும் கலையாக பார்க்கப்படுகிறது.