இராக்கதன் : சினிமா விமர்சனம்

மாடலிங் துறையில் ஈடுபடும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் இருட்டு பக்கங்களை காட்சிப்படுத்தி இயக்குனராக கவனம் பெறுகிறார் தினேஷ் கலைச்செல்வன்.

Update: 2023-07-25 10:14 GMT

 கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன், காயத்ரி ரெமா மூவரும் சிறுவயதில் இருந்தே நட்பாக பழகுகிறார்கள். விக்னேஷ் பாஸ்கருக்கு மாடலிங்கில் சாதிக்க ஆசை. ரியாஸ்கானின் மாடலிங் பயிற்சி நிறுவனத்தின் அழைப்பை ஏற்று செல்லும் அவருக்கு எதிர்பாராத சிக்கல்கள் வருகின்றன. அதில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார். நண்பனை தேடிக்கொண்டு தினேஷ் கலைச்செல்வனும், காயத்ரி ரெமாவும் நகரத்துக்கு வருகிறார்கள். அப்போது ஓட்டல் அறையில் விக்னேஷ் பாஸ்கர் இறந்து கிடக்கிறார். தினேஷ் கலைச் செல்வன் மீது கொலைப்பழி விழுகிறது. அதில் இருந்து விடுபட்டாரா? நண்பனை கொன்றது யார்? என்பது மீதி கதை…

மாடலிங்காக வரும் விக்னேஷ் பாஸ்கரை சுற்றியே பெரும்பகுதி கதை நகர்கிறது. அவரும் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து தரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விபசார கும்பலிடம் சிக்கி தவிக்கும்போதும் சென்டிமென்ட் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

காயத்ரி ரெமா கொஞ்சம் நேரம் வந்தாலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக வருகிறார் வம்சி கிருஷ்ணா. அவர் கொலையை சாமர்த்தியமாக துப்பு துலக்கும் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுகின்றன. கிளைமாக்சில் என்கவுன்ட்டர் நெருக்கடியில் அழுத்தமான நடிப்பை வழங்கி உள்ளார்.

தினேஷ் கலைச்செல்வன் நண்பன் கதாபாத்திரத்துக்கு அசாத்தியமான நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். கிளைமாக்சில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார்.

மாடலிங் நிறுவனம் நடத்துபவராக வரும் ரியாஸ்கான் வித்தியாசமான உடல்மொழியால் வில்லத்தனம் செய்து மிரட்டுகிறார். சஞ்சனா சிங் கவர்ச்சியில் தாராளம். நிழல்கள் ரவி, சாம்ஸ் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நியாயம் செய்துள்ளனர்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக வேகம் எடுக்கிறது. பிரவீன் குமார் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. மானஸ் பாபு கேமரா மாடலிங் உலகை நேர்த்தியாக படம் பிடித்துள்ளது.

மாடலிங் துறையில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் இருட்டு பக்கங்களை நட்பு, காதல், திரில்லர் பின்னணியில் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தி திறமையான இயக்குனராக கவனம் பெறுகிறார் தினேஷ் கலைச்செல்வன்.

Tags:    

மேலும் செய்திகள்