சிறுவயதில் இருந்து நாயகன் சுர்ஜித்தும், நாயகி ராஜேஸ்வரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களிடையே நாளடைவில் காதல் மலர்கிறது.
இவர்களை பிரிக்க ராஜேஸ்வரியின் தாய் செய்யும் சதிசெயலால் சுர்ஜித் தந்தையுடன் ஊரை விட்டு வெளியேற நேர்கிறது. பிறகு சுர்ஜித்துக்கு அவரது தந்தை சுவாதியை கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
சுர்ஜித் மனைவியுடன் விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்.
சுவாதியோ கணவன் மனம் மாறி தன்னுடன் குடும்பம் நடத்துவார் என்று பொறுமையோடு காத்திருந்தும் பலன் இல்லை.
இந்த நிலையில் தன் பால்ய சினேகிதி ராஜேஸ்வரியை சந்திக்க அவருடைய கிராமத்துக்கு போகிறார் சுவாதி.
அங்கு ராஜேஷ்வரி காதல் தோல்வியால் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கிறார். அப்போது தன்னுடைய கணவரும், ராஜேஸ்வரியும் காதலித்து பிரிந்தவர்கள் என்றும், ராஜேஸ்வரி நினைவால்தான் கணவர் தன்னுடன் குடும்பம் நடத்தவில்லை என்றும் புரிந்து கொள்கிறார்.
அதன் பிறகு சுவாதி புதுவிதமான முடிவு எடுக்கிறார். அந்த முடிவு என்ன? இதனால் அவர்கள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என்ன என்பது மீதி கதை.
நாயகன் சுர்ஜித்துக்கு சிறுவயது காதலியை மறக்கவும், மனைவியுடன் வாழவும் முடியாத தவிப்பான கதாபாத்திரம். அதை நிறைவாக செய்துள்ளார். வெறுப்பு காட்டும் கணவனுடன் வாழும் கனமான கதாபாத்திரத்தில் வலியும், அழுகையுமாய் அபாரமாக நடித்துள்ளார் சுவாதி.
ராஜேஸ்வரியும் தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
மோஹித், பாரதிமோகன், திவ்யா ஸ்ரீதர், ரயில் கார்த்தி ஆகியோரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
மலைச்சார்ந்த கிராமத்தையும், வெள்ளந்தியான மக்களையும் மிக இயல்பாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.கோகுல்.
இசையமைப்பாளர் ரிஷாந்த் அஸ்வின் கதையோடு கலந்து கொடுத்திருக்கும் பாடல்களை ரசிக்க முடிகிறது.
சமகாலத்து இளைஞர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக காதல், சென்டிமென்ட் கலந்து ஜனரஞ்சகமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணி பாரதி.
குழந்தையை தத்தெடுத்த தாய் தனக்கு வாழ்க்கை அமைந்த பிறகு அந்த குழந்தையை அப்படியே விட்டுவிடுவது, லாஜிக் மீறல்.