சினிமா விமர்சனம் : கபடி புரோ

கபடி விளையாட்டு பின்னணியில் காதல், மோதல் என்று காட்சிகளை கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் சதீஷ் ஜெயராமன்.

Update: 2023-07-03 06:26 GMT

 

கபடி விளையாட்டு வீரர் சுஜன். இவர் பாயும் புலி என்ற பெயரில் கபடி அணி வைத்து நண்பர்கள் சிங்கம்புலி, சஞ்சய் வெள்ளங்கி ஆகியோருடன் போட்டிகளில் விளையாடி வருகிறார். தில்லுமுல்லு செய்து வெற்றி பெறுவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். சுஜனை அவரது முறைப்பெண் காதலிக்கிறார். ஆனால் சுஜனுக்கு போலீஸ் அதிகாரி மதுசூதனராவ் மகள் பிரியா லால் மீது காதல் வருகிறது. சுஜனின் மோசடித்தனங்கள் தெரிந்த மதுசூதனராவ் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரியா லாலிடமும் சுஜன் நம்பகத்தன்மையை இழக்கிறார். ஆனாலும் தனது காதல் நிஜமானது என்று நம்ப வைக்க போராடுகிறார். அப்போது ஊரில் கபடி போட்டி நடக்கிறது.

அந்த போட்டி மூலம் சுஜன் ஏமாற்றுக்காரர் என்பதை நிரூபிக்க மதுசூதன ராவ் முடிவு செய்கிறார். சுஜனோ போட்டியில் நேர்மையாக விளையாடி வெற்றி பெற போராடுகிறார். போட்டியில் ஜெயித்தாரா, காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? என்பது கிளைமாக்ஸ்.

சுஜன் கபடி வீரராக துறுதுறுவென வருகிறார். அவரது தில்லு முல்லுத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. இன்னொரு நாயகனாக வரும் சஞ்சய் வெள்ளங்கி யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார். மதுசூதன ராவ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மிடுக்காக வருகிறார். சுஜனை பழிவாங்க துடிக்கும் காட்சிகளில் ஆவேசம் காட்டி உள்ளார்.

பிரியா லால் காதல் காட்சிகளில் கவர்கிறார். ரஜினி கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். மறைந்த மனோபாலா கல்யாண புரோக்கர் கதாபாத்திரத்தில் வந்து கலகலப்பு ஊட்டுகிறார்.

ஹானா, சண்முக சுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி, சிசர் மனோகர் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. கபடி விளையாட்டு பின்னணியில் காதல், மோதல் என்று காட்சிகளை கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் சதீஷ் ஜெயராமன்.

டேனியல் பின்னணி இசை கதையோடு ஒன்ற வைத்துள்ளது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பலம்.

Tags:    

மேலும் செய்திகள்