தொடக்க வீரராக அதிக சதம்: தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் வார்னர்
தொடக்க ஆட்டக்காரர் வார்னருக்கு இது 20-வது ஒருநாள் போட்டி சதமாகும்.
புளோம்பாண்டீன்,
ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர்( 106 ரன், 93 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), மார்னஸ் லபுஸ்சேன்( 124 ரன், 99 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோர் சதமும், டிராவிஸ் ஹெட் (64 ரன்), ஜோஷ் இங்லிஸ் ( 50 ரன்) அரைசதமும் நொறுக்கினர்.
இதில் தொடக்க ஆட்டக்காரர் வார்னருக்கு இது 20-வது ஒருநாள் போட்டி சதமாகும். ஏற்கனவே டெஸ்டில் 25 சதமும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதமும் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடக்க ஆட்டக்காரராக அதிக சதங்கள் (46 சதம்) அடித்தவர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ஆட்டங்களில் 45 சதங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரை வார்னர் முந்தியுள்ளார். பின்னர் 393 ரன் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா ஆடியது.