விஜய் பேசிய அசூரன் பட வசனம் குறித்து வெற்றிமாறன் பதில்
விஜய் நேற்று நிகழ்ச்சியில் அசூரன் பட வசனம் பேசியிருந்தார். இது குறித்து வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில், சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசூரன் பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனிடம், அசூரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார், இதனை எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது? இதற்கு வெற்றிமாறன் அளித்த பதில், ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம் தான் இது.
மேலும் அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, அந்த மேடையில் அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.