தனி படமாகும் ரோலக்ஸ் கதாபாத்திரம்.. மனம் திறந்த சூர்யா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘விக்ரம்’. இப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரம் வைத்து தனி திரைப்படம் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா, ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். அப்போது தனது அடுத்த படங்கள் குறித்து அவர் கூறியுள்ளார். அதில், 'ரோலக்ஸ்' கேரக்டரை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.