ஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ரஜினி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.