அசோக் செல்வன் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்துவார் -விக்னேஷ் ராஜா நெகிழ்ச்சி
அசோக் செல்வன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’. இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. 'போர் தொழில்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசும்போது, ''விக்னேஷ் ஒரு நல்ல இயக்குனராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குனராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குனர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குனர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும்.
விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி'' என்று பேசினார்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசியதாவது, '' என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு தான். இந்தகதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை.. எழுதியதை... எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குனருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். சக்திவேல் சார் ஒவ்வொரு படத்தையும் பக்காவாக டிசைன் செய்கிறார். அவருக்கு நன்றி. தீபா மேடமுக்கு நன்றி. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் மிக அட்டகாசமாக செய்துள்ளார்.
இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்து படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. படத்தை 2010- ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. நிகிலா விமல் கேரக்டர் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார். அசோக் செல்வன் காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குனர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்துவான்.
சரத்குமார் சாரை நன்றாக நடிக்க வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும். இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செய்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ?, அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார். அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம்" என்று பேசினார்.