நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு வாடகைத் தாய் யார்...? மருத்துவமனை மீது நடவடிக்கை
சட்ட நிபுணர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ளன.
சென்னை
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் இந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியில்லை அல்லது விருப்பம் இல்லை என்பதை உரிய முறையில் தெரிவித்து இருக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சமீபத்தில் இதுபற்றி சட்டப்பூர்வமான பிரச்சினைகள் எழுந்ததும் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இதையடுத்து இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்ட நிபுணர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ளன.
வாடகை தாய் சட்ட விசயத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
இந்தநிலையில் நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.
நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன. அந்த மருத்துவமனையில் உள்ள சில டாக்டர்கள்தான் நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் விசயத்தில் ஆலோசனைகள் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
எனவே அவர்களிடம் விசாரணை நடத்துவது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் விவாதித்து வருகிறார்கள்.
பண கஷ்டத்திற்காக குழந்தை பெற்று கொடுக்கும் வகையில் வணிக ரீதியில் இந்த முறையை பயன்படுத்தக் கூடாது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு, நயனின் கேரளத்து உறவினர் ஒருவர் வாடகைத்தாயாக இருந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. என்ன உறவு அவர் யார், என்ன உறவு முறை என்றெல்லாம் தெரியவில்லை. அந்த பெண்ணை நயன்தாரா தரப்பு அணுகி அவரது சம்மதம் கேட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது.
மேலும் வாடகைத் தாயாக அந்த பெண்ணுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக மருத்துவர் சான்றளித்த பிறகே இந்த முறைக்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டன என்கிறார்கள்.