யார் சூப்பர் ஸ்டார்...? நாம் தமிழர் கட்சி சீமான் சொல்கிறார்...!
தற்போது உச்சத்தில் இருப்பது நடிகர் விஜய்தான் என சீமான் கூறினார்.
சென்னை
பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு பெரிய ஹீரோக்களின் படம் நீண்ட ஆண்டுகள் கழித்து நேரடியாக மோதவுள்ளது. இந்த இரு படங்களின் குழுவினரும் அவர்களுக்கான புரோமோஷன் வேலைகளை மும்மரமாக செய்து வருகின்றனர்.
வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ, பேட்டி ஒன்றில் "விஜய்தான் நம்பர் 1 ஸ்டார்" என்று பேசினார் அந்த கருத்து சர்ச்சையானது.
"விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன. அப்படி இருப்பினும், என் ஹீரோ விஜய்தான் பெரிய ஸ்டார். அதனால்தான் வாரிசுக்கு நிறைய திரையரங்குகளை ஒதுக்குங்கள் என்று கேட்டேன். ஒருவர் பெரிய ஸ்டார் என்பதை எப்படி நிர்ணயம் செய்யமுடியும் ..? ஒரு திரையுலக நட்சத்திரத்தின் மதிப்பு, அவருக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வசூல் மூலமே நிர்ணயம் செய்யப்படும்.
விஜய் நடித்து வெளியான கடைசி 6 படங்களும், தமிழகத்தில் மட்டும் 60 கோடி ரூபாயிற்கு மேல் வசூல் செய்துள்ளது; ஒரு படம் ஹிட்டோ பிளாப்போ.. அது வேறு விஷயம். விஜயின் படங்கள் தொடர்ந்து சீரான வசூலை செய்து வருகிறது. அதனால், தற்போது மற்றவர்களை விட அவர்தான் பெரிய ஸ்டார்." எனவிளக்கம் அளித்தார்
இந்த் நிலையில் யூடியூப் பிரபலம் பிஸ்மி. இவர் சினிமா பத்திரிகையாளர், திரைப்பட விமர்சகர். இவர் சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது.
அந்த நேர்காணலில், "ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவர் இப்போது முன்னாள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நடிகர் விஜய் தான் இப்போதைய சூப்பர் ஸ்டார். தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியதில் எந்த தவறும் இல்லை. விநியோகஸ்தர்கள்கூட இதை ஏற்றுக் கொள்வார்கள்" என கூறியிருந்தார்.
இதனால் ஆவேசமடைந்த ரஜினி ரசிகர்கள் பிஸ்மியை சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இது குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
வாரிசு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய்தான் நம்பர்.1 என சமீபத்தில் தெரிவித்ததும் சர்ச்சையானது. பின்னர் நடிகர் சரத்குமாரும் இதே கருத்தை முன்வைத்தார்.
இந்நிலையில், சீமான் இது குறித்து திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா? என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் எனும் உயரிய இடம் யாருக்கும் நிரந்தரமானதில்லை. காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். முதலில் தியாகராஜ பாகவதர் இருந்தார். அடுத்து எம்.ஜி.ஆர். அடுத்து ரஜினி. தற்போது உச்சத்தில் இருப்பது நடிகர் விஜய்தான். இந்த கருத்தைக் கூறியதற்காக பத்திரிக்கையாளர் பிஸ்மியை மிரட்டும் வகையில் அவரது அலுவலகத்திற்கு சென்ற ரஜினி ரசிகர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறி உள்ளார்.